ADVERTISEMENT

’’இது தான் சமூக நீதியை படுகொலை செய்யும் செயலாகும்’’ -  அன்புமணி ராமதாஸ்

02:57 PM Jun 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மாணவி பிரதீபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ADVERTISEMENT

‘’மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மனமுடைந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நஞ்சு குடித்து தர்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.


கடந்த 2017-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண் எடுத்த பிரதீபா நீட் தேர்வில் வெற்றி பெற்ற போதிலும், குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியவில்லை. இந்த ஆண்டாவது அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்று முயன்ற நிலையில் 39 மதிப்பெண்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்ததால் இந்த துயர முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நீட் தேர்வு என்பது ஏழைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிப்பதற்கான கருவியாக மாறியுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் பிரதீபாவுக்கு மருத்துவப்படிப்பில் கடந்த ஆண்டே இடம் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வு தான் அவரது வாய்ப்பை பறித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரதீபாவை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணம் இருந்ததால் தனியார் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில், பிரதீபாவிடம் பணம் இல்லாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இது தான் சமூக நீதியை படுகொலை செய்யும் செயலாகும்.


அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போதிலும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் போக்கு மிகவும் வேதனையளிக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைவது மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்றாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்வது எந்த வழியிலும் தீர்வாகாது. மாணவச் செல்வங்கள் எவரும் தேர்வு முடிவுகளால் ஏமாற்றம் அடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் இத்தகைய தற்கொலைகளை தடுக்கவும், சமூக நீதியைக் காக்கவும் நீட் தேர்வை ரத்து செய்வது ஒன்று தான் தீர்வு என்பதால் அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT