Skip to main content

'அழைப்பை' மறுத்தவள் கட்டையால் அடித்துக்கொலை: கொலையாளி தற்கொலை முயற்சி

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
karuppasamy


நெல்லை மாவட்டத்தின் கலிங்கப்பட்டி அருகேயுள்ள கீழ் மரத்தோணி கிராமத்தின் கீழ்புறக் காலனியைச் சேர்ந்த சந்திரசேகர். கூலித் தொழிலாளியான இவர் கத்தார் நாட்டில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது இளம் மனைவி சங்கரேஸ்வரி, இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் சங்ரேஸ்வரி, அந்தப் பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.
 

கணவன் வெளி நாட்டிலிருப்பதால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்தவரும், சங்கரேஸ்வரியின் சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கருப்பசாமி (45) அவளோடு பழக்கமாகி, அடிக்கடி செல்போன் மூலம் பேசியும் தங்களின் நட்பை வளர்த்து பழகியுள்ளனர் என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.


ஒரு லெவலுக்கு மேல் போன வேளையில் தன்னுடைய பழக்கம் வெளி நாட்டிலிருக்கும் தன் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்கிற பயம் தொற்றியிருக்கிறது. அதனால் பீதியான சங்கரேஸ்வரி, கருப்பசாமியுடனான தன் பழக்கத்தைத் தவிர்த்திருக்கிறார். போன் வாயிலாக தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தி டார்ச்சர் கொடுத்த கருப்பசாமியின் அழைப்பையும் துண்டித்திருக்கிறார். அதனால் வெறியான கருப்பசாமி, நேரிலேயே சங்கரேஸ்வரிக்கு செக்ஸ் டார்ச்சர், கொடுக்க, அதை அவள் கண்டித்திருக்கிறார்.
 

 

 

இதனிடையே நேற்று மதியம், வழக்கம் போல் சங்கரேஸ்வரியும், அதே பகுதியின் மாரியப்பன் மனைவி முருகலட்சுமியும் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப் பகுதிக்குப் போயிருக்கின்றனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கருப்பசாமி, பகல் மறையாத அந்த நேரத்திலும் அங்கே சென்று சங்கரேஸ்வரியை உறவுக்கு அழைத்திருக்கிறார் அப்போது அவர்களிடயே வாய்த்தகராறு மூண்டிருக்கிறது.

 

karuppasamy


வெறி தலைக்கேறிய நிலையில், ஆத்திரமான கருப்பசாமி, அங்கு கிடந்த கட்டையைக் கொண்டு சங்கரேஸ்வரியை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்ரேஸ்வரியின் மூச்சு சம்பவ இடத்திலேயே அடங்கியிருக்கிறது. இதைப் பார்த்து முருகலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்திலுள்ளவர்கள் திரண்டு வர, தகவல் காவல் நிலையம் பறந்திருக்கிறது. ஸ்பாட்டுக்கு வந்த கரிவலம் இன்ஸ்பெக்டர் சித்ரகலா சங்கரேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை மேற் கொண்டவர் தப்பிய கருப்பசாமியை தேடத் தொடங்கியிருக்கிறார்.
 

 

 

தன்னை போலீஸ் தேடுவதை அறிந்து பொறி கலங்கிப் போன கருப்பசாமி, போலீஸ் பயம் காரணமாக, விவசாயப் பயிருக்குத் தெளிக்கப்படும் குருனை மருந்தினை உட் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். வயலில் மயங்கிக் கிடந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.


இதனிடையே கொலையுண்ட சங்கரேஸ்வரியின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்காக சங்கரன்கோவில், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் குற்றவாளி கருப்பசாமியும் சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்ட தகவலால் அவளது உடலைப் பெற வந்த உறவினர்களிடையே கொந்தளிப்பு நிலவிய சூழலில், அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் பொருட்டு கருப்பசாமியை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
 

பாலியல் வறட்சியின் தாக்கத்தால் இந்த மூர்க்கத் தனத்தை நடத்திய கருப்பசாமிக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடிகளின் அட்ராசிட்டி; தொழிலாளி வெட்டிக் கொலை - ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
shoot on rowdy in nellai
சந்துரு- பேச்சித்துரை

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.

போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில்  கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.

ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.

தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.

shoot on rowdy in nellai

இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.

Next Story

நெல்லையில் பரபரப்பு; பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
DMK councilors boycotted Nellai Corporation's budget meeting

நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட், மற்றும் சாதாரண அவசரக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் பிப் 28 காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடி நெல்லை வருகையின் காரணமாக பட்ஜெட் கூட்டம் மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாலை குறிப்பிட்ட நேரத்தில் நெல்லை மாநகராட்சி மன்ற அரங்கத்திற்கு மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, கமிசனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரில் 2 வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி தன் கைகுழந்தையுடன் வந்திருந்தார். தி.மு.க. கவுன்சிலர்கள் நான்கு பேர், காங்., கம்யூ கட்சிகளின் கவுன்சிலர்கள் என 55 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்

மாலை நான்கு மணி கடந்தும் போதிய கவுன்சிலர்கள் ஆஜராகாததால், அரங்கத்திற்கு வந்த மேயர் சரவணன் பட்ஜெட் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கவுன்சிலர் சந்திரசேகர் மாலை 6 மணி ஆகியும் கூட்டம் தொடங்கவில்லை, தி.மு.க.கவுன்சிலர்கள் வராமல் புறக்கணித்து விட்டார்கள். மக்களின் பிரச்சினைகள், வார்டு பணிகள் பற்றிப் பேச தி.மு.க.கவுன்சிலர்கள் வராதது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான பணிகள் முடங்கியுள்ளன என்றார், ஆவேசமாக.

DMK councilors boycotted Nellai Corporation's budget meeting

இதனால் மாமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களுக்கிடையேயான மோதலின் விளைவுதான் மாமன்றக் கூட்டம் முடங்குமளவுக்குப் போனது. அரசு தலையிட்டு இந்த விவகாரத்திற்கான தீர்வு காண்பது அவசியம். இது நடக்காத பட்சத்தில் மாமன்றத்தின் செயல்பாடுகளும், மக்கள் பணிகளும் கேள்விக்கிடமாகி விடும். மாநகரமே பாதிக்கப்படும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

தி.மு.க. கவுன்சிலர்களில் சிலரிடம் பேசிய போது, புயல் வெள்ளத்தால் நெல்லையில் பெரும்பாலான வார்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மேம்படுத்த மேயரின் கவனத்திற்கு கோரிக்கை வைத்தும் அவர் தனக்கு ஆதாயமான வார்டுகளையே கவனிக்கிறார். பிற வார்டுகளைப் புறக்கணிக்கிறார். மேயரின் இத்தகைய போக்கினால் தான் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்தோம் என்கிறார்கள்.