
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 58 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு திமுகவை சேர்ந்த பெண் செகனாஸ் ஆபிதா நகர மன்றத் தலைவராக உள்ளார். இவருக்கு உறுதுணையாக அவரது சகோதரரும் திமுக மாணவர் அணி அமைப்பாளருமான இபதிஹார் ஹசன் உள்ளார். இவர் சேர்மனாக பொறுப்பேற்றதிலிருந்து கீழக்கரையில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை ஓரளவு குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் கீழக்கரை பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.211 கோடி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முயற்சியால் கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டுவது, மீன் கடை பகுதியில் உள்ள கட்டடங்கள் மோசமாக உள்ளதால் இந்த கட்டடங்களைப் புதிதாகக் கட்டுவது, துணை சுகாதார நிலையம் அமைக்க, நகராட்சி புதிய கட்டடம் அமைக்க எனத் தீவிரமாகச் செயல்பட்டு நிதிகளைக் கேட்டு வருகிறார். மேலும், தினந்தோறும் காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்துவிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்க ஆரம்பித்து விடுவார். தற்சமயம் மக்களின் குறைகளை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நகராட்சி வளாகத்திலேயே மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தி அதற்கு உடனடியாக தீர்வு கண்டு அசத்தி வருகிறார் கீழக்கரை நகர மன்றத் தலைவர் செகனாஸ் ஆபிதா.
இது பற்றி திமுக நகர மன்றத் தலைவரிடம் கேட்டபோது, “தமிழக முதல்வர், நாங்கள் கேட்கும் நிதிகளை உடனடியாக ஒதுக்கித் தருகிறார். எங்களுக்கு மிகவும் உறுதுணையாக எங்கள் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளதால் நாங்கள் நிறைய மக்கள் பணிகளை எந்த தொய்வுமின்றி செய்ய முடிகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்றார்.