/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4178.jpg)
கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அடுத்தடுத்து பலியாகும் துயரச் சம்பவங்களால் பெற்றோர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.
திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமம் மருங்காபுரி ஒன்றியம் வைரம்பட்டி கிராமம் (திருச்சி மாவட்டம்). இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளான முருகேசன் - சுதா தம்பதி. இவர்களுக்கு லோகநாதன் (வயது 12), தருண்ஸ்ரீ (வயது 8) என இரண்டு மகன்கள் இருந்தனர். முருகேசன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சுதா தனது மகன்களுடன் திருப்பூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து கொண்டே தனது மகன்களை அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
தற்போது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சிறுவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இன்று (17ம் தேதி) மதியம் லோகநாதன் (வயது 12), தருண்ஸ்ரீ (வயது 8). இரண்டுசிறுவர்களும் வீட்டின் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலம் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி எத்தவேளாண் கண்மாய் பக்கமாக இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர்களது அம்மா சுதா தேடிச் சென்றபோது கண்மாய் கரையில் இரு சிறுவர்களின் டவுசர்கள் கிடந்துள்ளன. தண்ணீரில் ஒரு சிறுவனின் உடல் மிதந்துள்ளது.
இதைப் பார்த்து அவர் கதறியுள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கண்மாய்க்குள் இறங்கி தேடியபோது மற்றொரு சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)