Kids escaped from trichy edamalaiputhur police station

Advertisment

திருச்சி எடமலைபட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர், தனியார் நிறுவனத்தில் காவலராக பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் (21.09.2021) இவர், வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை திருடுபோயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து எடமலைபட்டிப்புதூர் காவல் நிலையத்தில் துரைராஜ் புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த காவலர்கள், சிசிடிவி காட்சியைக் கொண்டு ஆய்வுசெய்தனர். அந்த சிசிடிவி காட்சியில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் துரைராஜ் வீட்டிற்குள் சென்று திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரித்தபோது நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து அந்த சிறுவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதனால், காவல் நிலையம் பின்புறமாக உள்ள கழிவறைக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவர்கள் அங்கிருக்கும் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி தப்பி ஓடிச் சென்றுள்ளனர். தப்பி ஓடிய சிறுவர்களைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.