Kidnapping a child by talking to the parents in a friendly manner

கன்னியாகுமரி மாவட்டம், மனவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் அந்த பகுதியில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத்திருமணமாகி ரதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதில் மூன்றாவதுகுழந்தையாக கைக்குழந்தைஸ்ரீஹரிஸ் (1 1/2 ) உள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி தனது குழந்தையுடன் கணவன் மற்றும் மனைவி இருவரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, அந்த கோவிலில் தங்கி இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இவர்களுடன் நட்பாக பேசி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பெண் இவர்களுடன் அந்த கோவிலில் தங்கி வந்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, நேற்று முன் தினம் (07-10-23) ரதி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணிகளை சலவை செய்வதற்காக திருச்செந்தூர் புறப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணும் தானும் உடன் வருவதாக கூறி அவர்களுடன் வந்துள்ளார். திருச்செந்தூர் வந்ததும், கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள குழியலறைக்கு துணிகளை சலவை செய்ய ரதி சென்றுவிட்டார். அந்த பெண், குழந்தையை தான் பார்த்து கொள்வதாக கூறியதால் ரதியின் கணவர் முத்துராஜ் சோப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு, குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு வருவதாக கூறி அந்த பெண் குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் முத்துராஜூம், ரதியும் கோவில் வளாகத்தில் தங்களது குழந்தையை தேடி வந்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு, காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 2 தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.