Skip to main content

ஆள் கடத்தல்.. கட்டப் பஞ்சாயத்து.. கொலை வெறி தாக்குதல்.. ஒன்றிய செயலாளர்  கைது

 

Kidnapping case Union Secretary arrested by police

 

ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத ஆறு பிரிவுகளில் தி.மு.க.வின் ஒ.செ. கைது செய்யப்பட்டிருப்பது முத்து நகர் மாவட்டத்தைத் தட தடக்க வைத்திருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வான இளையராஜா அந்தப் பஞ்சாயத்தின் தலைவரும் கூட. இந்த இளையராஜா பல நிழல் வேலைகளைத் திரை மறைவில் நடத்தி வந்திருக்கிறார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராகப் பணிபுரிகிற முருகப்பெருமாள் மதுரையைச் சேர்ந்தவர். இதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியிலிருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் மருத்துவரை கடந்த மூன்று மாதமாகக் காதலித்து வந்திருக்கிறார் முருகப்பெருமாள், சில வேளைகளில் தன் காதலி பெண் மருத்துவரின் வீடு வரையும் போய் வந்திருக்கிறார். வீடு வரை வந்த இவர்களின் வெளிப்படையான காதலை காதலியின் தாயாரான, நகரின் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிபவருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும், பெண்ணின் தாய்க்கு அவர்களின் காதலில் இஷ்டமில்லாததால் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.


ஆனால், தாயின் எதிர்ப்பை மீறி அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இதற்கு ஃபுல் ஸ்டாப் வைக்க எண்ணிய பேராசிரியை தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவரும், ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வுமான இளையராஜாவிடம் தன் மகளின் காதலைத் தெரிவித்து, பையனை கண்டித்து வைக்கச் சொன்னதுடன் இனி அவள் பக்கம் அவன் திரும்பக் கூடாது என எச்சரிக்கை செய்யுமாறும் கூறியிருக்கிறாராம்.


இதையடுத்து கடந்த 18ம் தேதியன்று மதியம் பயிற்சி முடித்துவிட்டு வந்த டாக்டர் முருகப் பெருமாளை தன் சகாக்களுடன் தனது காரில் கடத்திக் கொண்டு ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டனூத்திலிருக்கும் தன் தோட்ட வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. கட்டப் பஞ்சாயத்து, ஊராட்சிக் காண்ட்ராக்ட் தொடர்பான பேரங்கள் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிழல் காரியங்கள் போன்ற வரவு செலவுகளையெல்லாம் இங்கே தான் டீல் பண்ணுவாராம் ஒ.செ. இளையராஜா. 


மருத்துவர் முருகப்பெருமாளை சுற்றி நின்று கொண்டிருந்த இளையராஜாவும், சகாக்களும், ‘காதலை இத்தோட முடிச்சுக்க லேய். பின்னால போன நடக்குறது வேற’ என மிரட்டியவர்கள் கம்பாலும், ரப்பர் பைப்பாலும் அவரை தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு ரத்தக் காயமாகி வலி தாங்காமல் அலறியிருக்கிறார். உயிர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமாளை அரிவாளை உயர்த்தி மிரட்டியதும், பதறிப் போன மருத்துவர், ‘இனி அந்தப் பக்கம் திரும்பமாட்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். 

 

அதனைத் தொடர்ந்து, ‘இனி தூத்துக்குடிப் பக்கமே நடமாடக் கூடாது. ஒன்னோட டிரஸ்களை எடுத்துக்கிட்டு மதுரைக்கே ஓடிப் போயிறு’ என மிரட்டியிருக்கிறாராம் இளையராஜா. அதன் பிறகே தன் சகாக்களை மருத்துவருடன் அனுப்பி அவரின் பகுதியில் கொண்டு சென்று விடச் சொல்லியிருக்கிறாராம். விடுதியில் மருத்துவரை இறக்கி விட்ட சகாக்கள் உடனடியாக அவரது உடைமைகளைப் பேக்கப் செய்து எடுத்து வர மிரட்ட, மருத்துவரும் அதன்படி தன்னுடைய லக்கேஜூடன் வர பின்னர் அவரை அப்படியே கொண்டு சென்ற அவர்கள், மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதோடு, பல கிலோ மீட்டர் தொலைவு பேருந்தை ஃபாலோ செய்திருக்கின்றனர்.


உடலில் காயங்களுடன் மதுரை வந்த முருகப்பெருமாள், வீட்டில் பெற்றோர்களிடம் எதையும் சொல்லாமல், தன் உயிர் நண்பனிடம் நடந்தவைகளைச் சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். அதிர்ந்து போன நண்பர் கொடுத்த தைரியத்தில், அவருடன் தூத்துக்குடி திரும்பிய முருகப்பெருமாள் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருக்கிறார். சிகிச்சையின் பொருட்டு வந்த மருத்துவ அதிகாரியிடம் தனக்கு ஏற்பட்டவைகளைத் தெரிவித்திருக்கிறார். அதன் பின் தொடர்புடைய தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் போக, மருத்துவமனையிலிருந்த மருத்துவர் முருகப் பெருமாளிடம் விசாரணை நடத்திய போலீசார் விஷயத்தை மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்க, அதன் பின் காவல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஒ.செ. இளையராஜாவும் அவரது சகாவான வானவராயன் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.


இது குறித்து நாம் மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரிடம் பேசிய போது, “ஆள் கடத்தல், மிரட்டல், ஆயுதம் கொண்டு தாக்கிய என 324, 506 (2) உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் இளையராஜா, அவருடன் இரண்டு பேர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இளையராஜா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவான அவரது டிரைவர் கோபால் தேடப்படுகிறார். இது தவிர, இளையராஜா மீது ஆறு பழைய வழக்குகளிருக்கின்றன. அவர்மீதான நில அபகரிப்புப் புகார் கலெக்டர் வசமிருக்கிறது” என்றார்.


சட்டம் தன் கடமையைச் செய்கிறது.