/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_241.jpg)
பர்கூர் அருகே, சிறுவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த டெம்போ வாகன ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள எலத்தகிரி ராம் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருக்கு திருமணமாகி, 16 வயதில் முருகேஷ் எனும் மகன் இருந்தார். 9ம் வகுப்பு வரை படித்துள்ள முருகேஷ், அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, குப்புசாமியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
தன்னுடைய தாயார், அப்பாவுடன் சண்டையிட்டுக் கொண்டு தனியாக பிரிந்து சென்றதற்கு எதிர் வீட்டில் வசிக்கும் டெம்போ வாகன ஓட்டுநரான பிரபு (28) என்பவர்தான் காரணம் என முருகேஷ் கருதினார். இதனால் அவர்களுக்குள் மோதல் இருந்துவந்தது. இந்த நிலையில், ஆக. 17ம் தேதி இரவு, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரபு, இரும்பு கம்பியால் முருகேஷை சரமாரியாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த முருகேஷ், நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனால் பதறிப்போன பிரபு மற்றும் அவருடைய அண்ணன்கள் கோவிந்தன் (32), திருப்பதி (30), மாமா அமாவாசை ஆகியோர் சேர்ந்து முருகேஷை தூக்கிச்சென்று அருகில் இருந்த வயல்வெளியில் வீசி எறிந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், வயல்வெளியில் சென்று பார்த்தபோது அங்கு முருகேஷ் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் கந்திகுப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுக்காக சடலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)