Skip to main content

நூடுல்ஸ் உண்ட குழந்தை திடீர் மரணம்! 

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Kid passed away after ate noodle
மாதிரி படம் 

 

திருச்சி மாவட்டம், தாளக்குடியைச் சேர்ந்தவர்கள் சேகர்-மகாலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் சாய் தருண் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை சாய் தருணுக்கு உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். 

 

இந்நிலையில், தாய் மகாலெட்சுமி சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் அதே நூடுல்ஸை எடுத்து குழந்தைக்கு காலை உணவாக மகாலட்சுமி கொடுத்துள்ளார். இதனை உண்ட குழந்தை மதியம் வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் சோர்வாக காணப்பட்டுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து மாலை குழந்தை திடீரென வாந்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி, குழந்தையை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 


இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்