khelo India Games will create new history Minister Udayanidhi Stalin

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ போட்டியை இன்று மாலை 06.50 மணியளவில் தொடங்கி வைத்தார். பின்னர் ‘வணக்கம் சென்னை’ என தனது உரையைத் தொடங்கி பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக கேலோ இந்தியா போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆவலோடு கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

khelo India Games will create new history Minister Udayanidhi Stalin

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகி உள்ளது. கடந்த 2021 ஆண்டில் இருந்து மாநில இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழக அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்களை விரைவில் வழங்க உள்ளோம்.

விளையாட்டுத்துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. கேலோ இந்தியா விளையாட்டை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டுகிறது. தமிழக அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் தடகள வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 79 புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம்.

Advertisment

தமிழகம் மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ளது. எனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை அளிக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் புதிய வரலாறு படைக்கும்” எனத் தெரிவித்தார்.