ADVERTISEMENT

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி

09:47 PM Jan 06, 2024 | mathi23

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஹரியானா மாநிலத்திலும், கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில்,கடந்த 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜனவரி 19ம் தேதி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023இல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், இந்தப் போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ளது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்டார். இந்த இலச்சினை தமிழ்நாட்டின் ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் தமிழ் உணர்வினைப் பறைசாற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இதற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினா கலங்கரை விளக்கம் அருகே கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா, வாள் வீச்சு விளையாட்டு வீராங்கனை மரியா அக்‌ஷிதா, கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT