/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bxfdfdg.jpg)
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக நேற்று வரை 10,691 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் காட்டப்பட்டவை. இந்த மரணங்களில் பெரும்பாலும் இணை நோய்களினால் ஏற்பட்ட மரணங்களே அதிகம் என்பதும் உபரி அறிக்கை.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் இணை நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாததும் மரணத்திற்குகாரணம் என்று சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார்.
ஆனால், அண்டை மாநிலமான கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசிலோ, கரோனா நோயாளி சாமான்யனாலும், சர்வேஸ்வரன் என்றாலும் சிகிச்சையின் அளவுகோல் வேறுபடாமல் நேர்கொண்ட முறையிலேயே பயணிக்கின்றன. மனித உயிரைக் காப்பாற்ற அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குருஷேத்திரமே நடத்துகின்றனர். அதற்கு சான்றாகவும் எடுத்துக்காட்டாகவுமிருக்கிறது இந்தச் சம்பவம் என்கிறார்கள்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருக்கும் சாத்தான்கோட்டா பகுதியின் சாதாரண மீன் வியாபாரி டைட்டஸ். அந்த நகரின் சந்தையில் மீன் விற்றால்தான் இவரது குடும்பம் வாழ முடியும்.70 வயதிலும் டைட்டஸ் ஆரோக்யமானவர்தானாம். மீன் மார்க்கெட்டில் கடந்த 80 நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று கண்டிருக்கிறது. டெஸ்ட்டிற்கு பிறகு அந்நகர சுகாதாரத் துறையினரால் தாரிப்பள்ளி பகுதியிலிருக்கும் கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தொற்றின் பலனாய் அவருக்கு சிறு நீரகம், நரம்பு, கல்லீரல், மாரடைப்புபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனையின் தொடர்புடைய பல்வேறு சிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் இணைந்து துவளாமல் தொடர்ந்து கூட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனராம்.
அரசு மருத்துவமனையில் மொத்தம் 72 நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறாராம். இதில் 42 நாட்கள் தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் டயாலிஸஸ் சிகிச்சையில் இருந்திருக்கிறார். பின்பு அவர் 20 நாட்கள் வரை கோமா நிலைக்கு போயிருக்கிறார். இதனை எல்லாம் மீட்டெடுத்து பரிபூரண குணமடைந்த டைட்டஸ், 72 நாட்களுக்கு பிறகு செப் 23 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார். ஆரம்பம் தொட்டு அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை 72 நாட்களாக அவரின் சிகிச்சைக்காக அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் 36 லட்சம் ரூபாய்.
டைட்டஸால் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 112. கொல்லம் மாவட்டத்தில் கரோனாதொற்றால் ஏற்பட்ட மரணம் இன்றுவரை வெறும் 31 பேர்கள் மட்டுமே. இதனையொத்த ஜனத்தொகை கொண்ட நெல்லை மாவட்டத்தின் கரோனாதொற்று மரணம் நாளது வரையிலும் 196 பேர். கடவுளின் தேசத்தில் சாமான்யனுக்கும் ராஜவைத்தியம்தான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)