Keezhadi issue central govt action is ulterior motive Selvaperunthagai

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்களே கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை மத்திய தொல்லியல் துறை அதனை பொதுவெளியில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் கீழடி முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு இந்தியத் தொல்லியல் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்தியத் தொல்லியல்துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார். போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன; அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது

Advertisment

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், “இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், கீழடி ஆய்வறிக்கை வெளியிடுவதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார்.ஆய்வறிக்கையின் இரண்டு கட்ட அகழ்வாய்வின் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பின் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

ஆரம்பத்தில் இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை அறிவியல்பூர்வ ஆய்வுகள் நடத்தினாலும், ஒன்றிய அரசு, அதை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக கீழடி ஆய்வறிக்கை ஒன்றிய அரசு வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.