Skip to main content

கீழடி கி.மு.600... ஆதிச்சநல்லூர் கி.மு.900... முதன்முறையாக ரேடார் மூலம் அகழாய்வு...!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

இந்தியாவிலேயே முதன் முறையாக ரேடார் தொழில்நுட்பம் மூலம் தமிழனின் நாகரீகத்தை கூறும் அற்புத இடமானா ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு செய்வதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.
 

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. உலகின் முதல் நாகரீகமான தமிழனின் நாகரீகத்தை கூறும் அற்புத இடம். ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ் மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர்.

keezhadi and adichanallur radar Excavating tamilnadu government

இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இங்கு தான் ஏறத்தாழ பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரான இரு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அது போக 185 தாழிகளும், மக்கிய நெல்மணிகள், ஆயுதங்கள், பொன் நகைகள் உட்பட பல பொருட்கள் கிடைத்தன.

keezhadi and adichanallur radar Excavating tamilnadu government

1876, 1896, 1902  மற்றும் 2004ம் ஆண்டுகளில் இங்கு நடைப்பெற்ற ஆய்வுகளின் தர அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் அதனின் துல்லிய வருடத்தினை அறிய அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ரேடியோ கார்பன் டேட்டிங் பகுப்பின் கீழ் ஆய்வினை நடத்தினர் இந்திய தொல்லியல் துறையினர். அதனடிப்படையில் ஆதிச்சநல்லூரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு.900 ஆண்டைச் சார்ந்த மக்கள் பயன்படுத்திய என்பது உறுதியானது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வருடங்கள் கி.மு.600 என கணக்கிடப்பட்டிருக்க, அதற்கு முந்தையது கி.மு.900 வருடத்திய நாகரிகம் எங்களுடையது என்கின்றது ஆதிச்சநல்லூர்.

keezhadi and adichanallur radar Excavating tamilnadu government

இவ்வேளையில், தாமிரபரணி நதிக் கரையை ஒட்டியுள்ள ஊர்களில் கள ஆய்வு செய்வதற்கும், கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள தர்மபுரி, சேலம் போன்ற பகுதிகளில் கள ஆய்வு செய்வதற்கும் தமிழகத் தொல்லியல் துறை திட்டமிட்ட நிலையில், இதற்காக தமிழக அரசும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனடிப்படையில் மீண்டும் ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ரேடார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. "இந்த ரேடார் தொழில் நுட்பம் மூலம் பூமிக்கடியில் 8 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி அங்குள்ள தனிமங்கள், கனிமங்களை புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யும்" என்கின்றனர் தொல்லியல் துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மதி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடி இரண்டாம் கட்ட அழகாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 26 ஆம் தேதி (26.02.2024) விசாரணைக்கு வந்தது.

keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்திருந்த உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கீழடி அகழாய்வு; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
keezhadi Excavation The High Court ordered the central govt to take action

கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் உள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.