''பள்ளியால் நான் பெருமையடைகிறேன்; என்னால் பள்ளி பெருமையடைகிறது'' - வாசகத்தை மெய்ப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!! 

keeramangalam govt school

'கஜா' புயல் சேதத்தால், குடிசை வீட்டின் மேல் போடப்பட்ட தார்ப்பாய்களைக் கூட இன்னும் மாற்ற முடியாத வறுமையில், ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, உள் ஒதுக்கீட்டில்மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளனர் ஒரே ஊரைச் சேர்ந்த மாணவ மாணவிகள். ஒரே ஊரில்,ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ, மாணவிகள்,ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்தகிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து பல வருடமாகச் சாதித்து வருகின்றனர். செரியலூர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைவகுப்பைபல ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து, அரசு பொதுத் தேர்வுகளிலும் திறனாய்வுத் தேர்வுகளிலும் சாதித்து வருகின்றனர்.

keeramangalam govt school

அதேபோல, செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து, தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திவ்யா, தரணிகா, ஹரிகரன் ஆகிய 3 மாணவ மாணவிகளும், தொடர்ந்து கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றனர். மேலும்,தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம், மருத்துவக் கலந்தாய்வில், திவ்யா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும்,தரணிகா தஞ்சை மருத்துவக் கல்லூரியையும், ஹரிகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து இன்று கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

ஒரு கிராமத்துப் பள்ளியில் ஒரே வகுப்பில் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய3 மாணவ, மாணவிகளும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்விலும் சாதித்து வந்ததுடன், தற்போது மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ளது அந்த கிராம மக்களையும் பெற்றோர்களையும் மகிழச் செய்துள்ளது. மிகுந்த சந்தோஷத்துடன் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

keeramangalam govt school

இது குறித்து மாணவர்கள் கூறும் போது, செரியலூர் நடுநிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் சேர்ந்து திறனாய்வுத் தேர்விலும்நீட் தேர்விலும் 3 பேர் தேர்வாகி, மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களும் மருத்துவராகலாம் என்பதைக் காட்டியுள்ளது என்றனர்.

பள்ளி ஆசிரியர் அன்பரசன் கூறும் போது, எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி கொடுக்கிறோம். அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவிக்கான திறனாய்வுத் தேர்வுகளில், பலர் தேர்வாகி உள்ளனர். அதன்படியே தற்போது ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளது மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாணவர்கள் குடும்பங்கள் அனைவருமே வறுமையில் உள்ளவர்கள் தான். அவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவி தேவைப்படும் போது உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

cnc

அதேபோல, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 4 மாணவிகள்,ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் எனஒரே ஊரில் இருந்து 5 மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்க காரணமாக இருந்துள்ளது,இந்த அரசுப் பள்ளிகள். இன்று காலை மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன் மற்றும் மாரிமுத்து ஆகியோரும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் மாணவர்களை வாழ்த்தி இனிப்பு வழங்கி, மருத்துவக் கல்லூரிகளுக்குவழியனுப்பி வைத்தனர்.

keeramangalam govt school

அந்தப் பள்ளியில் உள்ள ஒரு வாசகம் நம் கண்ணில்பட்டது,

"இது என் பள்ளி.. பள்ளியால் நான் பெருமையடைகிறேன். என்னால் பள்ளி பெருமையடைகிறது''

இந்த வாசகத்தை மெய்ப்பித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்!

govt school Keeramangalam Medical Student
இதையும் படியுங்கள்
Subscribe