Skip to main content

கே.சி.பி.யின் 198 கோடி சொத்துக்கள் ஏலம்.. ஸ்டேட் பேங்க் அறிவிப்பு..

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

KCP's 198 crore assets auctioned .. State Bank announces ..

 


கரூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.சி. பழனிச்சாமி (85), திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். தொழிலதிபரான இவருக்கு கரூர் மாவட்டம் மாயனூரில், கே.சி.பி. பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டுவந்தது. புதுச்சேரியிலும் தொழில் நிறுவனம் உள்ளது. கரூர், பொள்ளாச்சியில் சொத்துகள் உள்ளன.

 

கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் கரூர் எம்.பி.யாக இருந்தார். அதன்பின் 2009ஆம் ஆண்டு கரூர் தொகுதி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது, இந்திய அளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு காட்டி எம்.பி. வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காட்டியதில் 2வது இடத்தில் இருந்தார். அத்தேர்தலில் தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார்.

 

அதன்பின் 2011ஆம் ஆண்டு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அதன்பின் 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அதே ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றபோது போட்டியிட்டார். அதில், தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரிடம் தோல்வியடைந்தார்.

 

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயர், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ. 197 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பு கோவை நாளிதழ்களில் ஸ்டேட் வங்கி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

 

பாரத ஸ்டேட் வங்கி ரூ. 81,00,54,930, கனரா வங்கி ரூ. 57,16,63,451, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 35,39,55,747, ஐடிபிஐ ரூ. 24,22,26,555 என ரூ. 197,79,00,683 கோடி சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கிக் கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமை பிரச்சனை உள்ளதால், அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்