k

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது தாய் மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளும் அந்தந்த மாநிலங்களில் சிக்கிக்கொண்டனர்.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் 45 பேர் உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 23 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், திருச்சியைச் சேர்ந்தவர்கள் 7 பேர், கடலூர், பெரம்பலூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என உள்ளனர்.

Advertisment

அவர்கள் தங்களிடமிருந்து பணத்தினை வைத்துக்கொண்டு போராடி ரூம்களைப் பெற்றும், உணவுப் பொருட்களைப் பெற்றும் சமைத்துச் சாப்பிட்டு வந்தனர். முதல் கட்ட லாக்டவுன் முடிந்து இரண்டாம் கட்ட லாக்டவுன் போடப்பட்டதும் பயந்து போன இவர்கள் தங்கள் நிலைகுறித்து ஏப்ரல் 17 ஆம் தேதி லக்னோ மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், பிரதமர் நரேந்திமோடிக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கையில் பணமில்லாத நிலையில் தற்போது சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதாக அந்தக் குழுவில் இருப்பவர்கள் நமது 'நக்கீரன்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு வேதனையுடன் கூறினர்.

தமிழகத்தில் இருப்பவர்களைப் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள், பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களை அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். சமீபத்தில் மகாராஷ்ட்டிராவில் இருந்து 127 பேர் தமிழகத்துக்குப் பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆனால் எங்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என வேதனை குரலை வெளிப்படுத்தினார்கள்.

Advertisment

இந்தத் தகவலை உடனடியாக வேலூர் நாடாளமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் துரைமுருகன் (திமுக) கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர் லக்னோவில் துயரத்தில் உள்ள தமிழர்களை அவர்களது மாநிலத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகிஆதித்யா, உத்திரபிரதேச மாநிலத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், மாநில அரசின் சார்பில் லக்னோவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகசுந்தரதுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.

லக்னோவில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் அவர்கள் சொந்த ஊருக்கு வர அனைத்து விதமான முயற்சிகளையும் செய்கிறேன் என நம்மிடம் தெரிவித்தார் எம்.பி கதிர் ஆனந்த்.