Skip to main content

“இருந்தாலும் கஷ்டம், இறந்தாலும் கஷ்டம்...” - மயானத்திற்கு செல்ல வழிகேட்டு பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

Kasangulam village people make tearful request tamilnadu government

 

மயானத்திற்கு பாதையின்றி பல ஆண்டுகளாக துயரத்தை அனுபவித்து வருகிறோம். இறந்த பிறகாவது நிம்மதியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்யுங்கள் என அரசுக்கு ஒரு கிராமமே கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளது. 

 

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி  அருகே  காசாங்குளம் கிராமத்தில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி முதலான எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் கோரையாற்றில் இருந்த சிறிய பாலத்தின் வழியாக மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது அந்த பாலத்தை அகற்றிவிட்டு, பல மீட்டர் உயரத்திற்கு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல கோரையாற்றை கடக்கும் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இத்தகைய சூழலில் காசான்குளத்தில சாமிநாதன் என்பவர் உயிரிழக்க, அவரது  சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல அந்த கிராம மக்கள் கோரையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இறங்கி சடலத்தை தலைக்கு மேல் தூக்கியபடி ஆற்றை கடந்துள்ளனர். ஆற்றை கடந்து செல்ல முடியாத உயிரழந்தவரின் வயதான உறவினர்கள், உடல் ஊனமுற்றவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆளாகினர்.

 

"இருந்தாலும் கஷ்டம். இறந்தாலும் கஷ்டம் என்கிற நிலையிலேயே நாங்கள் வாழுகிறோம்" என்று கலங்கும் அந்த கிராம மக்கள், வாழும்போதுதான் அடிப்படை வசதிகூட இல்லாமல் ஆதரவற்ற மக்களாக, கடைக் கோடியில் வாழுகிறோம். சாகும்போதாவது நிம்மதியாக போய்ச் சேரவேண்டும் என்கிற எங்களின் மனக் கஷ்டத்தை அரசு உணர்ந்து உடனடியாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்துத் தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.