/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_6.jpg)
கரூர் மாவட்டம் சுண்டு குழிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). லாரி ஓட்டுநரான இவருக்கு சுமதி (வயது 44) மனைவியும், செல்வராஜ் (வயது23) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செல்வராஜ், தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான சுண்டு குழிப்பட்டிக்கு வந்துள்ளார். மேலும் இவர்வீட்டுக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக் கொண்டே இருந்துள்ளார். இதனால் செல்வராஜை அவரது தந்தை கோவிந்தராஜ் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்தநிலையில் காணப்பட்ட செல்வராஜ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்டு கதறிய சுமதி, மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் இறந்த சிறிது நேரத்திலேயே விஷச் செடியை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
Follow Us