Karur missing students found in katpadi

கரூர் ராயனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிகள் 3 பேர் கடந்த 4ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து மூன்று மாணவிகளும் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் மூன்று மாணவிகளின் சீருடைகள் மட்டும் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்களிடம் சீருடை குறித்து விசாரித்தபோது, தங்களது பெற்றோர்களுக்கு பிறந்தநாள் எனக்கூறி சீருடையை கழட்டிவிட்டு மாணவிகள் மாற்று உடை உடுத்திச் சென்றதாகக் கூறியுள்ளனர்.

Advertisment

Karur missing students found in katpadi

கரூர் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகாரளிக்க, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், 3 மாணவிகளும் மினி பேருந்தில் பயணம் செய்தது தெரியவந்தது. ஆனால் எங்கு சென்றார்கள்? எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தனிப்படையின் விசாரணையில், கரூர் ரயில் நிலைய சி.சி.டி.வி. பதிவில் மூன்று மாணவிகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வீடியோ காட்சியைக் கைப்பற்றிய போலீசார், அனைத்து ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்று காலை சென்னை காட்பாடி ரயில்வே நிலையத்தில் இந்த மூன்று மாணவிகளும் இருந்ததைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Advertisment

Karur missing students found in katpadi

அப்போது அவர்கள், கரூர் ரயில்வே நிலையத்திலிருந்து ஈரோடு ஜங்ஷன் சென்று அங்கிருந்து சென்னை வந்ததாகக் கூறியுள்ளனர். எதற்காக கரூரில் இருந்து புறப்பட்டு வந்தீர்கள் என விசாரித்தபோது, தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இசைக் குழுவான பி.டி.எஸ். குழுவின் வீடியோக்களை பார்த்து அதில் மூழ்கி அவர்களைக் காண்பதற்காக கொரியா செல்ல புறப்பட்டோம் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

மாணவிகளின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த ரயில்வே போலீஸார், பிறகு மாணவிகளைத்தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கரூர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து மூன்று மாணவிகளை மீட்டு வர கரூர் போலீசார் காட்பாடி விரைந்துள்ளனர்.