Skip to main content

கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திண்டுக்கல் முதியவர் உயிரிழப்பு! உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

டெல்லிக்கு சென்று வந்த பேரன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர்,  கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  k


கரூர் காந்தி கிராம அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் மட்டுமன்றி நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்ற 9 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பாதிக்கப்பட்ட 31 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இது தவிர கரோனா அறிகுறியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 54 பேரும், நாமக்கல் மாவட்ட சேர்ந்த 48 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
 

nakkheeran app



இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா பாதிப்பால் திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். டெல்லிக்கு சென்று திரும்பிய அவருடைய பேரன் மூலம் முதியோருக்கு கரோனா  ஏற்பட்டது. ஏற்கனவே அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது.   அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கரூர் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிர்ப்பலி இது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  உடலை அடக்கம் செய்ய கரூர் அருகே பாலத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் பரவியது.  இதை அறிந்த அப்பகுதி மக்கள்,  இறந்தவரின் உடலை இங்கு  கொண்டுவந்து புதைத்தால் அதன் மூலம் நோய்த் தொற்று பரவும் என இங்கு உடலை புதைக்க கூடாது எனவும்,  வேண்டுமானால் எரித்துக் கொள்ளுங்கள் எனக்கூறி சாலையில் தடுப்புகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நோய்த்தொற்று ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு முறையில்தான் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும்,  இதற்காக 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும் என்றும், யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் அந்த முதியவரின் உடல் உரிய பாதுகாப்புடன் நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சுகாதாரத் துறையினர் ஆலோசனையின் பேரில் விதிமுறைகளைக் கடைப் பிடித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.  

உடல் அடக்கத்தின்போது ஒரு சில உறவினர்கள் மட்டுமே இருந்தனர். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேரில்  தற்போது ஒரு முதியவர் இறந்ததை தொடர்ந்து மீதியுள்ள 64 பேர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்