Karur girl child case... police arrested under pocso act

Advertisment

கரூரில் பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை ஒன்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இங்கு மருத்துவர் ரஜினிகாந்த் என்பவர் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக உள்ளார்.

இந்த மருத்துவமனையில் 40 வயதான பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றிவந்தார். அந்தப் பெண் காசாளர் மருத்துவமனையில் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவளி போனஸ் மற்றும் மாத சம்பளம் போன்றவற்றை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் காசாளர் பணியிலிருந்து நின்றுவிட்டிருக்கிறார்.

அந்தப் பெண் காசாளரின் இரண்டாவது மகள் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயுடன் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி அங்கு சென்றுவருவதில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாலை மருத்துவமனை மேலாளர் சரவணன் என்பவர், மாணவியின் செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, ‘தீபாவளிக்கு அம்மாவிற்கு சம்பளம், போனஸ் தரவில்லை. அதனால், மருத்துவமனைக்கு நீ மட்டும் வந்து வாங்கிக்கொள்’ எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து, அந்த மாணவி மருத்துவமனைக்குத் தனியாகச் சென்று அங்கு மருத்துவர் ரஜினிகாந்த் அறைக்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது மருத்துவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தமாணவி மருத்துவமனையில் நடந்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தமாணவியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் மருத்துவர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து, அம்மருத்துவமனை மேலாளர் சரவணன், மருத்துவர் ரஜினிகாந்த் இருவரும் தலைமறைவானார்கள். கரூர் தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மேலாளர் சரவணனை நேற்று (16.11.2021) தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மருத்துவர் சரவணனை தீவிரமாக தேடிவந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மருத்துவர் ரஜினிகாந்தையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.