
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த பேருந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இன்று (26.02.2025) அதிகாலை வந்து கொண்டிருந்தது. அதே சமயம் எதிர் திசையில் திருச்சியை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அப்போது பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பேருந்தின் அடிப்பகுதியில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் கார் அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கியது.
இது குறித்துத் தகவலறிந்த குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 5 பேர் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்கள் 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டுக் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதி மலைநகர் அருகே உள்ள சுகுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. செல்வராஜ் (வயது 52), அவரது மனைவி கலையரசி, இத்தம்பதியரின் மகன் அர்ஜூன், மகள் அகல்யா மற்றும் கார் ஓட்டுநர் ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள கிழையூரில் உள்ள அக்கினி வீரனார் கோயிலுக்குத் தரிசனம் செய்ய காரில் பயணம் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பாகக் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, குளித்தலை டி.எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர், குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் என உயர் அதிகாரிகள் பலரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.