karur district kulithalai engineering student arrested by police

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் நித்தீஷ் குமார்(21), இ.சி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை எனும் மாணவர் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இருவருக்கும் கூடா நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிதீஷ் குமார், அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று வந்த இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், நிதீஷ் குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார்.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அண்ணாமலை முசிறி பார்வதிபுரத்தில் உள்ள நிதிஷ்குமார் வீட்டிற்கு சென்று பலமுறை சமாதானத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நிதிஷ்குமார் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கல்லூரி என்பதால் வழக்கம்போல கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலம் அருகே பேருந்து வந்தபோது திடீரென அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.

Advertisment

இதனை பார்த்த சக மாணவ மாணவிகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். இதனை அடுத்து கல்லூரி பேருந்து நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் நித்தீஷ் குமாரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஜினியர் மாணவர் அண்ணாமலையை கைது செய்த குளித்தலை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் கூடா நட்பு இருந்த விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து குளித்தலை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.