Skip to main content

செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிராகரித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Karur District Collector's order rejecting Senthilpalaji's block development fund canceled

 

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை, கரூர் மாவட்ட மருத்துவமனைக்குப் பயன்படுத்த மறுத்த, கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு, வெண்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க,  தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே மூன்று லட்சத்தை ஒதுக்க, மாவட்ட ஆட்சியருக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை, அரவக்குறிச்சி தொகுதி மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மற்ற தொகுதிக்குப் பயன்படுத்த முடியாது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால்,  நிதி பயன்படுத்தப்பட வில்லையா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், கரோனா சூழலில், செந்தில் பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி, தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.