Karur is a dancing youth who boarded a bus in the rain

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில் கரூர் மாவட்டத்தில் வாட்டி வதைத்தது. இதனால் மழையை எதிர்பார்த்து அனைத்து மக்களும் காத்திருந்தனர். அண்மையில் தமிழகம் முழுவதும் லேசானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம்(20.5.2024) மாலை 4 மணியளவில் துவங்கிய மழையானது கனமழையாக பெய்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கரூரில் கொட்டி தீர்த்த மழையின் அளவு 113 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இந்த கனமழை பெய்த நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மினி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்து மீது ஏறி வாலிபர் ஒருவர் குதூகலமாக நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisment

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் அடுக்குமாடி குடியிருப்பின், மொட்டை மாடி ஒன்றில் ஒரு நபர் கோடை மழையில் மகிழ்ச்சியாக குளியல் போட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.