ADVERTISEMENT

மாணவிகள் நலனில் உதிரம் உயர்த்துவோம் திட்டம் 

02:40 PM Feb 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்‌ 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்கனவே ரத்த முன்மாதிரி எடுக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் 16 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அதில் இரத்த சோகை உள்ள மாணவிகளைக் கண்டறிந்தனர். பரிசோதனையின் அடிப்படையில் மூன்று பிரிவாகப் பிரித்து சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் ரத்த சோகை உள்ள மாணவிகள் குணமடையவும் சோர்வின்றி நல்ல உடல் நலத்துடன் கல்வி கற்க ஏதுவாக கரூர் மாவட்டத்தில் இரத்த சோகை கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழ்நாடு முதல்வரின் வாக்கியத்திற்கு ஏற்ப பள்ளியில் பயிலும் மாணவிகள் ரத்த சோகை நோயினால் சோர்வடைந்து, பலவீனத்தால் கல்வி கற்க முடியாமல் இருப்பதை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நலமுடன் வாழவும் வழிவகை செய்யும் வகையில் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மேம்படுத்தி இரத்த சோகையில் இருந்து மீள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி இத்திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

கரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவியர்களிடையே அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று 17,000 மாணவியர்களிடையே ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் பரிசோதனை மேற்கொண்டு இரத்த சோகை உள்ள மாணவியர்களுக்கு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை நோய் அதிகமாக கண்டறியப்பட்ட மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி உள்ளோம். இதன் மூலம் ரத்த சோகையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வதன் மூலம் மாணவிகள் நல்ல திடமான உடல் நலமும் திறனறிவும் பெறுவர். மேலும் நல்ல கண் பார்வையும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவர்" எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT