Karur car driver passes away out of collector office

கொடிய நோய்த் தொற்றாக வந்த கரோனா வைரஸ், மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியது ஒருபுறம் என்றால், பொது முடக்கம் எனப் பலரின் தொழிலையும் வருமானத்தையும் முடக்கியது மறுபுறம்.

Advertisment

சொந்தவாகனத்தில்கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தில் நிம்மதியாக வாழ்ந்த ஒரு ஒட்டுநர், இனி இருந்து எதுவும் செய்யமுடியாது என்ற விரக்தியால் விபரீத முடிவு எடுத்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம், கரூர் நகரை மட்டுமல்ல வாகன ஒட்டுநர்களின் அனைத்துக் குடும்பங்களையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம், கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம், அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்களும் உள்ளார்கள். ஒரே ஒரு காரை வைத்து, மனைவி பெயரில் டிராவல்ஸ்வைத்து, அந்த கார் மூலம் வருமான ஈட்டிவந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை டிரைவராக, சம்பளத்திற்குத் தான் வேலை செய்துள்ளார். சேமித்து வைத்த ஒரு சிறிய தொகையை வைத்து, ஃபைனான்சில் கடன் பெற்று, சொந்தமாக கார் வாங்கி இவரே வாடகைக்கு ஒட்டி வந்துள்ளார்.

அதில் கிடைக்கும் வருமானத்தில் சென்ற மார்ச் மாதம்வரை காருக்கு வாங்கிய ஃபைனான்ஸ் (கடன்) கட்டியது போக, தனது குடும்பச் செலவுக்கும் குறைவில்லாமல் இவருக்கு வருவாய் வந்துள்ளது. அதன் பிறகு கரோனா பொது முடக்க காரணத்தினால், வருவாய் இல்லாமல் போகியுள்ளது. குடும்பம் நடத்தவே பல இடங்களில் கடன்பெற்று நாட்களை நகர்த்தியுள்ளார். பொதுமுடக்கம் முடிந்து, தளர்வுகள் அளிக்கப்பட்டும், முன்புபோல வருவாய் எதுவும் இல்லை. ஆனால், காருக்கு வாங்கிய ஃபைனான்ஸ் கடன், அந்த கடனுக்கு வட்டி, அந்த வட்டிக்கு வட்டி அது போக, வெளியே வாங்கிய கடன் இப்படி, பாஸ்கரின் குரல்வளையை நான்கு புறமும் கடன் கயிறு நெருக்கியது.

Advertisment

இந்த நிலையில்,கடந்தவருடம்தனது இரண்டு மகள்களும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க, அவர்களை ஈரோட்டிலுள்ள ஒரு கல்லூரியில் மேற்படிப்புக்காகச் சேர்த்துள்ளார். ஆன்லைன் வகுப்புதான் என்றாலும் கல்விக் கட்டணம், பாடநூல் கட்டணம் என்ற சுமை, மேலும் ஏறியுள்ளது. தனது மகள்களின் மேற்படிப்புக்குப் பணம் தயார் செய்ய முடியாமல் மிகவும் தடுமாறியிருக்கிறார். தனது உறவினர்களிடம் பணம் கேட்டும், வட்டிக்குப் பணம் கேட்டும், தேவையான தொகை கிடைக்கவே இல்லை.

வேறு வழி இல்லாமல், தான் வைத்திருந்த வாகனத்தை விற்றுவிடலாம் என பாஸ்கரன் முடிவுக்கு வந்தார். ஆனால், அந்த வாகனத்தை விற்க எஃப்.சி புக் வேண்டும். அது ஃபைனான்ஸ் கம்பெனியில் உள்ளது. இதனால் உள்ளம் நொறுங்கி மனமுடைந்த பாஸ்கரன், கடந்த 10ஆம் தேதி இரவு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

அங்கிருந்த மக்கள் கொடுத்த தகவலின்அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற தான்தோன்றிமலை போலீஸார், பாஸ்கரனின் உடலைக் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.