karur atm incident

Advertisment

கரூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் உள்ளது. இதில் மர்ம நபர் ஒருவர், அரிவாள் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

கரூர் மாநகர மையப் பகுதியும், பரபரப்பான வர்த்தகப் பகுதியுமான ஜவஹர் பஜாரில், கரூர் வைஸ்யா என்ற தனியார் வங்கி, ஏ.டி.எம் மையத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் 7 ஆம்தேதி அதிகாலை, சுமார் 3 மணி அளவில் 25 வயது மதிக்கதங்க ஒரு இளைஞர் உள்ளே சென்றுள்ளார். சுற்றும் முற்றும் பார்த்துநோட்டம் விட்ட அந்த இளைஞர்,தனது பையில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் கத்தியை எடுத்துப் பணம் எடுக்கும் எந்திரத்தை வெட்டி,'பணத்தைக் கொடு... பணத்தை கொடு'எனக் கத்தியவாறே வெட்டு வெட்டு என வெட்டியுள்ளார்.

ஆனால் வெகு நேரமாக எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த எந்திரத்தை உடைக்கவே முடியவில்லை. பணமும் வரவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்து விட்டார். நீண்ட நேரம் ஆகியதாலும், விடிகிற நேரம் ஆகி விட்டதால் இனி மக்கள் நடமாட்டம் துவங்கிவிடும் என்பதை அறிந்தும், அந்த இளைஞர் ஏ.டி.எம் இயந்திரத்தைக் கடைசியாக ஒரு முறை வெட்டிவிட்டு அந்த மையத்தை விட்டு ஓடிவிட்டார். பின்னர் அந்த ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த, பொதுமக்கள் அந்த இயந்திரத்தில் பணம் எடுக்கும் பாகம் உடைந்து கிடப்பதைக் கண்டு அந்த வங்கிக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

இதன்பிறகு, வங்கி அதிகாரிகள் கரூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ஜான்பீட்டர் மகன் மொய்சன்குமார் என்பதும், திருச்சியில் இருந்து கரூர் வந்த அவர், குடிபோதையில் கரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்ததாகவும், பிறகு ஊர் செல்லப் பணம் இல்லாததால் அந்தப் பகுதியில் இருந்த பழக்கடையில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு ஏ.டி.எம்-ஐஉடைக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.