
வெளிநாட்டிலேயே ஆட்சி மாற்றம் கொண்டுவரும் பா.ஜ.க.வுக்குத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல எனத் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பதவி தருகிறேன் என பேரம் பேசி குறுக்கு வழியில் பா.ஜ.க.விலிருந்து யாரையும் தி.மு.க. இழுக்க நினைத்தால் அதே வழியைக் கையாண்டு தி.மு.க.விலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. இழுக்கும்.
அடுத்த நாட்டிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த கட்சிக்கு, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது பெரிய விஷயம் கிடையாது. தி.மு.க. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை மாநில அரசு கடைப்பிடித்தால் எந்தத் தனியார் பள்ளியிலும், கல்லூரியிலும் இரு மொழிக்கு மேல் எந்தப் பாடமும் இருக்காது எனச் சட்டம் இயற்ற வேண்டும். பா.ஜ.க. இதை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தும். வேலை வாய்ப்புப் பெற மும்மொழிக் கொள்கையை மாநில அரசும் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.