“எனது மகன் டாக்டர் ஆக முடியாது... அதனால் குண்டு வீசினேன்...” - கருக்கா வினோத்தின் பரபரப்பு வாக்குமூலம் 

Karukka Vinod's sensational confession to police

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டுகளை வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது.

இதையடுத்து, இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் கடந்த மாதம் 26 ஆம் தேதி காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கிண்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (30-10-23) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கருக்கா வினோத் போலீஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல்சிறையில் இருக்கும்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால், நான் மன உளைச்சல் அடைந்தேன். எனது மகன் 6 ஆம் வகுப்பு படிக்கிறான். நீட் தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான்? எனவே, நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் முன்பு பா.ஜ.க அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன். இப்போது, ஆளுநர் மாளிகை முன்பு வீசியுள்ளேன் என்று கருக்கா வினோத் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

கருக்கா வினோத்தின் போலீஸ் காவல் நாளையுடன் (02-11-23) முடிகிறது. போலீஸ் காவல் முடிந்தபின், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார். இதற்கிடையே, கருக்கா வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Investigation police
இதையும் படியுங்கள்
Subscribe