
அதிமுக கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக பார்க்க வில்லை, அதே சமயம் அதிமுக பெரிய கட்சி என்பதனையும் ஏற்றுக்கொள்கிறேன் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எதிர் அணியில் இருக்கும் முக்கியமான கட்சி அண்ணா திமுக. அந்த கட்சியை நான் எப்போது குறைத்து மதிப்பிட்டது கிடையாது. இரட்டை இலைக்கு என்றே ஒரு பெரிய வாக்கு வங்கி தமிழகத்தில் காலம் காலமாக இருந்துகொண்டே இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இன்றுமே அதே வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால், அந்த கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. நான் பார்த்த வரையில், கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்கள் அதிமுக பாஜக கூட்டணியை விரும்பவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாம் தோற்றுப் போனோம். அவர்களிடம் பிரிந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்? என்று தொண்டர்கள் பலரும் கேட்கின்றனர். ஒரு வகையில் அதுவும் நியாயமான கேள்விதான். அதனால் அதிமுக கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக பார்க்க வில்லை, அதே சமயம் அதிமுக பெரிய கட்சி என்பதனையும் ஏற்றுக்கொள்கிறேன்.
புதிதாக துவங்கப்பட்ட விஜய்யின் கட்சிக்கு ஒரு எனர்ஜி இருக்கிறது. அந்த எனஎஜி ஒரு உருவமாக ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாக மாறி தேர்தலை சந்தித்து எவ்வளவு வாக்கு வாங்கும் என்பதனை தெளிவாக என்னால் சொல்லமுடியவில்லை. நேற்றுதான் ஒரு சர்வே பார்த்தேன். ஆனால் அந்த சர்வே இன்னும் வெளியே வராததால், அதுகுறித்து என்னால் கருத்து கூறமுடியவில்லை. ஆனால் அந்த சர்வேவில் நான் எதிர்பார்த்ததுதான் வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.