/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras5633_47.jpg)
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை,சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015- ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளைவிற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 7 கோடியே 37 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘வருமான வரித்துறை நடைமுறைகள் எதையும் முறையாகப் பின்பற்றவில்லை. கடந்த 2015- 2016 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில், சொத்து விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டும் வருமான வரித்துறை, அந்த ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. மேலும், கணக்கு தாக்கலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அந்த அதிகாரி தான் வழக்கு தொடர வேண்டும். எனவே, வருமான வரித்துறை துணை இயக்குனர் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)