
காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின், வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குசொந்தமான சொத்துக்களை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் பெற்ற 6 கோடியே 38 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கடந்த 2014-2015 மற்றும் 2015-2016 ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து வருமான வரித்துறை கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், போதுமான கால அவகாசம் அளித்து நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து 3 கோடியே 86 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி வருமான வரித்துறை கடந்த ஜூலை 15ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசத்தை வழங்கி, மறுமதிப்பீடு தொடர்பாக 5 வாரங்களுக்குள் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வருமான வரித் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)