Advertisment

“கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” - அமைச்சர் துரை முருகன்

Karnatakas refusal to provide water is an act of deceiving TN farmers Minister Durai Murugan

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் நேற்று (12.09.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு, காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையின்படியும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின்படியும், நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ளவேண்டும். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகிய அமைப்புகளை அமைக்க உத்தரவிட்டதன்படி, ஜூன், 2018 முதல் இவ்வமைப்புகள் நடைமுறையில் உள்ளன. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாச்சாரத்தின் (pro rata) படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

Advertisment

செப்டம்பர் 12 ஆம் தேதியில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆகும். மேலும், செப்டம்பர் மாதத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுமார் 10 டி.எம்.சிக்கு மேல் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடக அணைகளில் இருந்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 6.75 டி.எம்.சி மட்டுமே. இதற்காக காவிரியிலிருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டி.எம்.சி என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் 27 டி.எம்.சி ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர்த்தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும். இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இருமாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

karnataka cauvery duraimurgan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe