
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மது பாக்கெட்டுகள் கடத்தி வருவதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் கர்நாடக மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காரை ஓட்டி வந்த பேரணாம்பட்டு பகுதி சேர்ந்த பயாஸ் அகமது(39) என்பவரை கைது செய்த போலீசார் 29 அட்டை பெட்டிகளில் இருந்த 1,800 கர்நாடகா மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆந்திராவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளில் தரமான மது கிடைப்பதில்லை, கேட்கும் பிராண்ட்கள் கிடைப்பதில்லை. ஒருமுறை ஒரு சரக்கு கம்பெனி வந்தால் மற்றொரு முறை வேறொரு கம்பெனி சரக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் குடிமகன்கள் வெவ்வேறு கம்பெனி சரக்குகளை மாற்றி மாற்றி குடிக்கும் நிலையே உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே பிராண்ட் சரக்கை குடிப்பது என்பது தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எலைட் கடைகளிலும் இதே நிலைதான். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கள்ள மது விற்பனையாளர்கள் கர்நாடகாவில் இருந்தும் பாண்டிச்சேரியில் இருந்தும் பிராண்டட் மற்றும் தரமான சரக்கு வகைகளை கள்ளத்தனமாக கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இது காவல்துறைக்கு தெரிந்தாலும் பல இடங்களில் கண்டு கொள்வதில்லை சில இடங்களில் மட்டுமே இப்படி மடக்கி பிடிப்பது பணியை செய்கின்றனர்” என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர்.