ADVERTISEMENT

“கர்நாடக அரசு 3 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது” - அமைச்சர் துரைமுருகன் 

02:39 PM Jul 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நீரினை தமிழகத்திற்கு அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் அந்தக் கடிதத்தை தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேற்று நேரில் சந்தித்து அளித்தார்.

மேலும் அமைச்சர் துரை முருகன், “கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழ்நாட்டில் நீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினைக் காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரைத் திறந்திட வேண்டும். இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்க வேண்டும். நீர் குறைபாட்டை ஈடு செய்ய கர்நாடகாவிற்குத் தேவையான அறிவுரைகளைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு மத்திய அமைச்சர், “கர்நாடக அரசு காவிரியில் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கு மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்குத் தேவையான முறையை செயல்படுத்துவதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுரைகளை வழங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து அமைச்சர் துரைமுருகன் தமிழகம் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு சுமார் 26 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. இதனால் 20 நாட்களுக்கு தான் டெல்டாவில் தண்ணீர் தர முடியும். எனவே பயிர் காயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை முன் கூட்டியே உணர்ந்து தான் கடந்த 5 ஆம் தேதியே நான் டெல்லிக்கு சென்று நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து உடனடியாக நீரைத் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

இரு மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறை இருக்குமானால், அப்போது இருக்கும் நீரை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்ற பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தான் உள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைந்து செயல்படுங்கள் என்று சொல்லுகிற அதிகாரம் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்குத் தான் உள்ளது. அதனை வலியுறுத்தத்தான் கடந்த 5 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. எனவே இந்த முறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு விரிவாகக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடித்தை மத்திய அமைச்சரிடம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அதன்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கடிதத்தை அளித்து நிலைமையை விளக்கினேன். அதற்கு மத்திய அமைச்சரும் நிலைமையை உணர்ந்து இரண்டொரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT