karnataka dam water tamilnadu minister duraimurugan

Advertisment

நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகாவின் புதிய அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "02/07/2021 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017- ல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்த போது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும், நிலநீரை செறிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி. கொள்ளளவுள்ள ஒரு அணையைக் கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019- ல் இந்த அணை அநேகமாக கட்டிமுடித்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் 18/05/2018- ல் ஒரு அசல் வழக்கும். ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14/11/2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

29/06/2021 அன்று தமிழக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழக அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து நடுவன் அரசை வலியுறுத்தும்.

நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்." இவ்வாறு அமைச்சர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.