Skip to main content

மறுக்கும் கர்நாடகா! முதல்வர் உருவபொம்மையை எரித்த விவசாயிகள்! 

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

karnataka cuvery issue

 

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் தெரிவித்தார். இதனை கண்டித்து, நாகையில், துணை - முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையாவின் உருவ பொம்மைகளை விவாசாயிகள் எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. அப்போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தார். இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

 

இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் சிறப்பு அவசர கூட்டம் 13ம் தேதி நடைபெற்றது. அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட இந்த கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து சித்தராமையா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதினார். அதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்ற நிலையில் தான் எழுதியிருந்தார்.

 

கர்நாடக முதவரின் கருத்தும், கடிதமும் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. கர்நாடகத்தின் இந்த முடிவை கண்டித்து நாகப்பட்டினம், அவுரி திடலில், காவிரி பாதுகாப்பு சங்கத்தினர் சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், “மொத்தம் பயிரிடப்பட்டுள்ள 5.6 லட்சம் ஏக்கரில், சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர் விவசாயத்தில் நெருக்கடியான சூழலில் உள்ளோம். அடுத்த 20 நாட்களில் எங்களுக்கு சுமார் 10 ஆயிரம் மில்லியன் கன (டி.எம்.சி.) தேவைப்படுகிறது. சம்பா சாகுபடியை தொடங்க இன்னும் 25 டிஎம்சி தேவைபடுகிறது. எனவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம், பாரபட்சமின்றி செயல்பட்டு, கர்நாடகா தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆணையத்தின் உத்தரவுகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இதனையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை-முதல்வர் டி.கே.சிவகுமார் இருவரையும் கடுமையாக கண்டித்து கோசங்கள் எழுப்பினர். மேலும், இருவரின் உருவ பொம்மைகளையும் தீயிட்டு கொளுத்தினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்