Advertisment

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா கராத்தே தியாகராஜன்?

karate thiagarajan

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்த திமுக தலைமை, பாஜகவை எதிர்த்து தேசியளவில் சந்திரபாபு நாயுடு கட்டமைக்கும் மெகா கூட்டணி முயற்சிக்குப் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரசின் இருப்பை உறுதி செய்தது.

Advertisment

இதனையடுத்து இரு கட்சிகளின் தலைமையிடம் பரஸ்பரம் புரிந்துணர்வு அதிகரித்து கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவும், ராகுலும் வருமளவுக்கு நெருக்கம் உருவானது. அதே போல, பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இப்படிப்பட்ட சூழலில்,"அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களுக்குச் செல்லும் சோனியாவும், ராகுலும் காமராஜர் நினைவிடத்துக்கும் வருவதற்கான முயற்சியை நீங்கள் எடுக்க வேண்டும். இது காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு" என வலியுறுத்தும் கடிதம் ஒன்றை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுக்கு அனுப்பியிருந்தார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன்.

rahul gandhi

இந்த கடிதம் லீக் அவுட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்ட நிகழ்வு முடிந்து, ராயப்பேட்டையிலிருந்து காமராஜர் நினைவிடம் வழியாக விமான நிலையம் சென்றனர் சோனியாவும் ராகுலும்.

அப்போது, சோனியா-ராகுலுக்கு வரவேற்பு அளிக்கும் முகமாக காமராஜர் நினைவிடம் அருகே காங்கிரஸ் தொன்டர்களுடன் காத்திருந்தார் தியாகராஜன். ஆனால், வரவேற்பை கவனித்தவாறே சென்ற சோனியாவும் ராகுலும் காமராஜர் நினைவிடத்துக்குச் செல்லவில்லை.

இதனால் அதிர்ப்தியடைந்த தொண்டர்கள், தியாகராஜன் தலைமையில் காமராஜர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.இந்த நிலையில்தான், காங்கிரஸ் உண்மைத் தொண்டர்கள் என்கிற பெயரில், 'கலகத்தை உருவாக்குகிறாரா கராத்தே தியாகராஜன்?' என்கிற கேள்வியுடன் சில தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறன்றனர்.

அதில்,' மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவும், பொதுக்கூட்டமும் சென்னையில் 16ம் தேதி நடந்தது.கோலகலமாக நடந்த இந்த விழாவில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதை சிதைக்க கராத்தே முயற்சி செய்கிறாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

அன்னை சோனியா, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

karate thiagarajan

அதனால், ப்ரோட்டகால் விதிமுறைகள் கண்டிப்பாக இருக்கும். சிலை திறப்புவிழா நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே அண்ணா அறிவாலயம், பொதுக்கூட்டம் நடத்தப்படும் ஒய்.எம்.சி.ஏ மைதானம், கலைஞர் சமாதி ஆகிய இடங்களுக்கு மட்டுமே சோனியாவின் விசிட் இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கேற்ப அந்த இடங்களில் மத்திய பாதுகாப்பு காவல் துறை வசம் வந்துவிடும்.நேற்று அரசியல் வந்தவர்களுக்கே இது தெரியும். காரத்தேவுக்கு ஏன் தெரியாமல் போனது? காமராஜர் நினைவிடத்தில் அன்னை சோனியா காந்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தவேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் எண்ணம். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

அப்படி அவருக்கு உண்மையிலேயே காமராஜர் சமாதிக்கு சோனியா வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், அதை முன்னரே தலைமைக்கு தெரிவித்து, அதற்காக மேலிடத்துக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி இருக்க வேண்டாமா?துணைமேயராக பதவி வகித்த இவருக்கு இந்த நடைமுறைகள் கூட தெரியவில்லையா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு ஒருநாள் முன்னாள் கடிதம் அனுப்பி வைத்துவிட்டு, ‘நானும் கடிதம் எழுதிவிட்டேன்’ என்பதுபோல் காட்டிக்கொள்கிறார்.

மொத்தத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முடிவான நிலையில் இப்படி செய்தால் அது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மட்டும் அல்ல. அவர் தொகுதியில் இருக்கும் தி.மு.க., தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

இப்படி சர்ச்சைகளை ஏற்படுத்தும் கராத்தே தியாகராஜன் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டால் அவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதனால்தான் அவரது கடிதத்துக்கு காங்கிரஸ் தலைவர் பதில் கடிதம் எழுதவில்லை என நினைக்க தோன்றுகிறது.

யாரை திருப்திபடுத்த அவர் இப்படி செய்கிறார் என்பது அவருக்குதான் தெரியும் ' என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்களின் மனக்குமுறல் என்ற பெயரில் பரவி வரும் இந்த தகவல்களை, திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள்தான் பரப்பி வருவதாக சந்தேகப்படும் கராத்தே தியாகராஜன் தரப்பு, தகுந்த பதிலடிகளைத் தந்து சில தகவல்களை பரப்பி வருகின்றது.

அதில், 'அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிவதற்காக சென்னை வந்த ராகுலின் பயணம் திடிரென்றுதான் முடிவானது. ரெகுலர் ப்ளைட்டில் வந்த அவரது பயணம் ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிலையில், 4 நபர்கள் கொண்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்புதான் ராகுலுக்கு கொடுக்கப்பட்டது. முன் கூட்டி எந்த பாதுகாப்பு படையும் சோதனை நடத்தவில்லை. மாநில போலீஸ் பாதுகாப்பு மட்டுமே இருந்ததே தவிர, ப்ரோட்டகால் நடைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், விமான நிலையத்திலிருந்து புல்லட் ஃப்ரூப் இல்லாத சாதாரண இண்ணோவா காரில் தான் அப்பல்லோ வந்தார் ராகுல்காந்தி.

karate thiagarajan

அதேபோல, வேலுர் சிறையில் இருக்கும் நளினியை சந்திக்க பிரியங்கா காந்தி வந்தபோதும், மத்திய பாதுகாப்பு படையினர் முன் கூட்டி வந்து சோதிக்கவில்லை. எஸ்.பி.ஜி.யை சேர்ந்த 4 நபர்கள் மட்டுமே பிரியங்காவுடன் வந்தனர். இவருக்கும் மாநில போலீஸ் பாதுகாப்பே கொடுக்கப்பட்டது. ஆக, இந்த இரு பயணங்களின் போதும் எந்த பிரச்சனையும் எழவில்லை. எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.

அப்படியிருக்க, தற்போதைய சோனியா-ராகுலின் பயணத்தின் போது காமராஜர் நினைவிடத்துக்கு அவர்கள் வருவதில் மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்சனை வந்து விடப்போகிறது. சோனியா செல்லும் கான்வாய் வழியில் தான் காமராஜர் நினைவிடம் இருக்கிறது. அப்படியிருக்க, ஒரிரு நிமிடம் காமராஜர் நினைவிடத்துக்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி சென்றால் தொண்டர்கள் உற்சாகமாவார்கள். இதில் எந்த ப்ரோட்டகால் நடைமுறைகளும் மீறப்பட்டப்போவதில்லை. காமராஜர் நினைவிடத்துக்கு சோனியாவும் ராகுலும் வந்திருந்தால் காங்கிரஸ் இமேஜ் அதிகரித்திருக்கும்.இதனை சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால் சம்மதித்திருப்பார்கள்.

ஆனால், திருநாவுக்கரசரும் முகுல்வாஸ்னிக்கும் சோனியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டனர். கராத்தே தியாகராஜனுக்கு ஏர்போர்ட் பாஸ் கொடுக்கப்படவில்லை. கொடுத்திருந்தால் காமராஜர் நினைவிடத்துக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கையை சோனியாவிடம் தெரிவித்திருப்பார். இது, நடக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை. அதனால், ப்ரோட்டகால் நடைமுறை எப்படி பட்டது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை.

கூட்டணியின் வலிமைக்காகவும் காங்கிரசின் தனித்தன்மையை நிலை நிறுத்தவும்தான் அந்த கோரிக்கையை முன் வைத்தார். அதை உணராமல், 'கூட்டணியில் குழப்பம்' என புரிதல் இல்லாமல் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. காங்கிரஸ் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருக்குமானால் சுயநலமில்லாத அர்ப்பணிப்பைக் காட்டுங்கள் ' என்று பதிலடி தந்து வருகின்றனர் கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்கள். இந்த விவகாரம், தற்போது தமிழக காங்கிரசில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Alliance congress karate thiagarajan Rahul gandhi sonia gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe