Skip to main content

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா கராத்தே தியாகராஜன்?

Published on 19/12/2018 | Edited on 20/12/2018


 

karate thiagarajan




திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்த திமுக தலைமை, பாஜகவை எதிர்த்து தேசியளவில் சந்திரபாபு நாயுடு கட்டமைக்கும் மெகா கூட்டணி முயற்சிக்குப் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரசின் இருப்பை உறுதி செய்தது. 

 


இதனையடுத்து இரு கட்சிகளின் தலைமையிடம் பரஸ்பரம் புரிந்துணர்வு அதிகரித்து கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவும், ராகுலும் வருமளவுக்கு நெருக்கம் உருவானது. அதே போல, பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். 

 


இப்படிப்பட்ட சூழலில், "அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களுக்குச் செல்லும் சோனியாவும், ராகுலும் காமராஜர் நினைவிடத்துக்கும் வருவதற்கான முயற்சியை நீங்கள் எடுக்க வேண்டும். இது காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு" என வலியுறுத்தும் கடிதம் ஒன்றை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுக்கு அனுப்பியிருந்தார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன். 

 

rahul gandhi





இந்த கடிதம் லீக் அவுட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்ட நிகழ்வு முடிந்து, ராயப்பேட்டையிலிருந்து காமராஜர் நினைவிடம் வழியாக விமான நிலையம் சென்றனர் சோனியாவும் ராகுலும். 
 


அப்போது, சோனியா-ராகுலுக்கு வரவேற்பு அளிக்கும் முகமாக காமராஜர் நினைவிடம் அருகே காங்கிரஸ் தொன்டர்களுடன் காத்திருந்தார் தியாகராஜன். ஆனால், வரவேற்பை கவனித்தவாறே சென்ற சோனியாவும் ராகுலும் காமராஜர் நினைவிடத்துக்குச் செல்லவில்லை. 
 


இதனால் அதிர்ப்தியடைந்த தொண்டர்கள், தியாகராஜன் தலைமையில் காமராஜர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இந்த நிலையில்தான், காங்கிரஸ் உண்மைத் தொண்டர்கள் என்கிற பெயரில், 'கலகத்தை உருவாக்குகிறாரா கராத்தே தியாகராஜன்?' என்கிற கேள்வியுடன் சில தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறன்றனர். 



அதில், ' மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவும், பொதுக்கூட்டமும் சென்னையில் 16ம் தேதி நடந்தது. கோலகலமாக நடந்த இந்த விழாவில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதை சிதைக்க கராத்தே முயற்சி செய்கிறாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி. 


அன்னை சோனியா, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.


 

karate thiagarajan



அதனால், ப்ரோட்டகால் விதிமுறைகள் கண்டிப்பாக இருக்கும். சிலை திறப்புவிழா நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே அண்ணா அறிவாலயம், பொதுக்கூட்டம் நடத்தப்படும் ஒய்.எம்.சி.ஏ மைதானம், கலைஞர் சமாதி ஆகிய இடங்களுக்கு மட்டுமே சோனியாவின் விசிட் இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. 


அதற்கேற்ப அந்த இடங்களில் மத்திய பாதுகாப்பு காவல் துறை வசம் வந்துவிடும். நேற்று அரசியல் வந்தவர்களுக்கே இது தெரியும். காரத்தேவுக்கு ஏன் தெரியாமல் போனது? காமராஜர் நினைவிடத்தில் அன்னை  சோனியா காந்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தவேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் எண்ணம். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

 


அப்படி அவருக்கு உண்மையிலேயே காமராஜர் சமாதிக்கு சோனியா வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், அதை முன்னரே தலைமைக்கு தெரிவித்து, அதற்காக மேலிடத்துக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி இருக்க வேண்டாமா? துணைமேயராக பதவி வகித்த இவருக்கு இந்த நடைமுறைகள் கூட தெரியவில்லையா? 

 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு ஒருநாள் முன்னாள் கடிதம் அனுப்பி வைத்துவிட்டு, ‘நானும் கடிதம் எழுதிவிட்டேன்’ என்பதுபோல் காட்டிக்கொள்கிறார். 

 

மொத்தத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முடிவான நிலையில் இப்படி செய்தால் அது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மட்டும் அல்ல. அவர் தொகுதியில் இருக்கும் தி.மு.க., தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

 


இப்படி சர்ச்சைகளை ஏற்படுத்தும் கராத்தே தியாகராஜன் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டால் அவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதனால்தான் அவரது கடிதத்துக்கு காங்கிரஸ் தலைவர் பதில் கடிதம் எழுதவில்லை என நினைக்க தோன்றுகிறது.
 


யாரை திருப்திபடுத்த அவர் இப்படி செய்கிறார் என்பது அவருக்குதான் தெரியும் ' என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
 

காங்கிரஸ் தொண்டர்களின் மனக்குமுறல் என்ற பெயரில் பரவி வரும் இந்த தகவல்களை, திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள்தான் பரப்பி வருவதாக சந்தேகப்படும் கராத்தே தியாகராஜன் தரப்பு, தகுந்த பதிலடிகளைத் தந்து சில தகவல்களை பரப்பி வருகின்றது. 
 

அதில், 'அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிவதற்காக சென்னை வந்த ராகுலின் பயணம் திடிரென்றுதான் முடிவானது. ரெகுலர் ப்ளைட்டில் வந்த அவரது பயணம் ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைமைக்கும்  தெரிவிக்கப்பட்டது. 

 

 

அந்த நிலையில், 4 நபர்கள் கொண்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்புதான் ராகுலுக்கு கொடுக்கப்பட்டது. முன் கூட்டி எந்த பாதுகாப்பு படையும் சோதனை நடத்தவில்லை. மாநில போலீஸ் பாதுகாப்பு மட்டுமே இருந்ததே தவிர, ப்ரோட்டகால் நடைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், விமான நிலையத்திலிருந்து புல்லட் ஃப்ரூப் இல்லாத சாதாரண இண்ணோவா காரில் தான் அப்பல்லோ வந்தார் ராகுல்காந்தி. 


 

karate thiagarajan


 


அதேபோல, வேலுர் சிறையில் இருக்கும் நளினியை சந்திக்க பிரியங்கா காந்தி வந்தபோதும், மத்திய பாதுகாப்பு படையினர் முன் கூட்டி வந்து சோதிக்கவில்லை. எஸ்.பி.ஜி.யை சேர்ந்த 4 நபர்கள் மட்டுமே பிரியங்காவுடன் வந்தனர். இவருக்கும் மாநில போலீஸ் பாதுகாப்பே கொடுக்கப்பட்டது. ஆக, இந்த இரு பயணங்களின் போதும் எந்த பிரச்சனையும் எழவில்லை. எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. 

 

அப்படியிருக்க, தற்போதைய சோனியா-ராகுலின் பயணத்தின் போது காமராஜர் நினைவிடத்துக்கு அவர்கள் வருவதில் மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்சனை வந்து விடப்போகிறது. சோனியா செல்லும் கான்வாய் வழியில் தான் காமராஜர் நினைவிடம் இருக்கிறது. அப்படியிருக்க, ஒரிரு நிமிடம் காமராஜர் நினைவிடத்துக்கு வந்து  மலர் தூவி அஞ்சலி செலுத்தி சென்றால் தொண்டர்கள் உற்சாகமாவார்கள். இதில் எந்த ப்ரோட்டகால் நடைமுறைகளும் மீறப்பட்டப்போவதில்லை. காமராஜர் நினைவிடத்துக்கு சோனியாவும் ராகுலும் வந்திருந்தால் காங்கிரஸ் இமேஜ் அதிகரித்திருக்கும். இதனை  சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால் சம்மதித்திருப்பார்கள். 

 


ஆனால், திருநாவுக்கரசரும் முகுல்வாஸ்னிக்கும் சோனியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டனர். கராத்தே தியாகராஜனுக்கு ஏர்போர்ட் பாஸ் கொடுக்கப்படவில்லை. கொடுத்திருந்தால் காமராஜர் நினைவிடத்துக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கையை சோனியாவிடம் தெரிவித்திருப்பார். இது, நடக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை. அதனால், ப்ரோட்டகால் நடைமுறை எப்படி பட்டது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை. 
 


கூட்டணியின் வலிமைக்காகவும் காங்கிரசின் தனித்தன்மையை நிலை நிறுத்தவும்தான் அந்த கோரிக்கையை முன் வைத்தார். அதை உணராமல், 'கூட்டணியில் குழப்பம்' என புரிதல் இல்லாமல் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.  காங்கிரஸ் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருக்குமானால் சுயநலமில்லாத  அர்ப்பணிப்பைக் காட்டுங்கள் '  என்று பதிலடி தந்து வருகின்றனர் கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்கள். இந்த விவகாரம், தற்போது தமிழக காங்கிரசில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.