Skip to main content

காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்!இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்! காரைக்கால் போராட்டக்குழு 

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

காரைக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பிராந்தியத்தை தமிழகத்துடன் இனைத்துவிட்டால் கூட பரவாயில்லை என்கிற எண்ணம் அப்பிராந்திய மக்கள் மத்தியில் பரவலாக உருவாகிவருவதாக காரைக்கால் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

 

 இதுகுறித்து போராட்டக்குழுவின் அமைப்பாளரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்," பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் 8 கொம்மியூன்கள், காரைக்காலில் ஆறு கொம்யூன்கள்  இருந்தன. புதுச்சேரியில் இருந்த பிரதிநிதித்துவ சபையில் புதுச்சேரி 24, காரைக்கால் 12, மாகி இரண்டு, ஏனாம் ஒன்று, சந்திரநாகூர் ஒன்று, என 40 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த பிரதிநிதிகள் சபை ஆளுநருக்கு ஆலோசனைகள் மட்டுமே சொல்ல முடியுமே தவிர, முடிவுகள் எடுக்க முடியாது. கொம்யூன்களே அதிகாரம் பெற்ற அமைப்புகளாக இருந்தன. ஆளுநர் ஒவ்வொரு கொம்யூன்களுக்கும் சமமான நிதியை ஒதுக்கீடு செய்தார்.

 

k

 

1954ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டபோது பிரஞ்சு இந்திய உடன்படிக்கையின்படி பிரதிநிதித்துவ சபை இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டன. ஆனால் 1962 இல் பிரெஞ்சு இந்திய உடன்படிக்கைக்கு முரணாக புதுச்சேரியில் சட்டபேரவை உருவாக்கப்பட்டப்பின் கொம்யூன்களுக்கான அதிகாரம் இல்லாத நிலையே உருவானது.

 

 சட்டப்பேரவை உருவாக்கப்பட்ட பின்னர் தான் ஆட்சியாளர்களால் காரைக்கால் புறக்கணிப்பு என்பது மெல்ல மெல்ல தலையெடுக்கத் தொடங்கியது. காரைக்கால் பிராந்தியத்துக்கு ஏழு எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 5 ஆக சுருங்கியது. இதேபோல எல்லா நிலைகளிலும் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது பிராந்திய மக்களிடையே பிரிவினையை உண்டு பண்ணும் செயல்பாடுகளும் தலைதூக்கியுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமே காரணம்.

 

காரைக்காலுக்கு அருகில் உள்ள தமிழக பகுதி மக்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் வளர்ச்சிப் பணிகளைப் பார்க்கும் போது காரைக்காலை தமிழகத்துடன் இணைத்து விடலாம் என்கிற எண்ணம் காரைக்கால் மக்களிடம் உருவாகிவருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல இதுகுறித்து புதுச்சேரி அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும். புதுச்சேரி அரசு காரைக்காலை புறக்கணிப்பதில் இருந்து முற்றிலும் கைவிட்டு வளர்ச்சியில் முழு அக்கறை செலுத்த வேண்டும். அல்லது காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்,"என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.