Skip to main content

பதவியேற்ற போது தாய் தந்தைக்கு சல்யூட்! அரசுப் பள்ளியில் மகன்! கவனம் ஈர்க்கும் குமரி எஸ்.பி! 

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக ஆட்சி அமைத்தவுடன் எடுத்த முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு தனியார் பள்ளிகளில் படித்து கொண்டிருந்த பிள்ளைகளை பெற்றோர்கள் தானாக முன் வந்து அரசு பள்ளிகளில் சோ்த்தனர். அது வரும் கல்வியாண்டிலும் தொடரும் விதமாக அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.  

 

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி குமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த ஹரிகிரன் பிரசாத் நியமிக்கப்பட்டார். ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டியில் படிப்பை முடித்து 2016-ல் ஐ.பி.எஸ் முடித்தார். திருச்சி, வள்ளியூர், சென்னை என காவல் பணியை மேற்கொண்ட ஹரிகிரன் பிரசாத் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதும் அரசு பள்ளிகள் மீது இருந்த அவருடைய மோகத்தால் தனது 5 வயது மகன் நஸ்ரித்தை அரசு பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்தார்.

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

தனது விருப்பத்துக்கு மனைவி விஷாலா ஹரியும் சம்மதம் தெரிவிக்க நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு பள்ளியில் மகன் நஸ்ரித்தை  கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொண்டு சேர்த்தனர். அரசு பள்ளி சீருடை அணிந்து கொண்டு உற்சாகத்துடன் சென்ற நஸ்ரித்தை மகிழ்ச்சியோடு வரவேற்ற சக மாணவர்களும்,  ஆசிரியர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்கள்.


இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் கூறும் போது, “தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் கோலோச்சி கொண்டிருக்கின்றன. அந்த பள்ளிகளில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தான் எனது மகனையும் சேர்த்துள்ளேன். அதற்கேற்றார் போல் மகனின் கல்வி தரமும் உயரும்” என்றார்.

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

இதற்கிடையில் ஹரிகிரன் பிரசாத் காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று கொண்டதும் தனது முதல் கடமையாக தந்தை நரசிம்மலு மற்றும் தாயார் கஸ்தூரிக்கு சல்யூட் அடித்து பெருமைப்பட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்