/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3334.jpg)
திருமணத்தை மீறிய உறவில் ஆண்களும், பெண்களும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு அவர்களின் வாரிசுகள் அல்லல்படுவதும் தொடர் கதையாக உள்ளது. அப்படி குமரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பலாின் மனதை உருக வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் ரதீஷ் குமார் (35). இவர், ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்தத் தம்பதி ஆரல்வாய்மொழியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (13-ம் தேதி) மதியம் ரதீஷ்குமாரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைத்து மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெனிஃபர் (36 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கத்தி மற்றும் குத்தூசியால் குத்தி கொலை செய்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசாரை மருத்துவமனைக்கு வரவழைத்து சரணடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஜெனிஃபரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொலைக்கான சம்பவத்தை எந்த பதட்டமுமின்றி போலீசாரிடம் அவர் கூறினார். அவர் கூறியதாவது; “நான் எம்.எஸ்.சி, பி.எட்., எம்ஃபில் முடித்து ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரதீஷ்குமார் 2013-ல் கருங்கல் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை பார்க்கும் போது, பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்க அங்கு சென்றேன். அப்போது எனக்கு ரதீஷ்குமார் அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். அதன் பிறகு எங்களுடைய பழக்கம் தொடர்ந்து நீடித்தது. இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினோம்.
இதற்கிடையில் திருமணமாகாத ரதீஷ் குமார் என்னை திருமணம் செய்து கொள்ள, கணவரை விவாகரத்து செய்ய சொன்னார். அவர் பேச்சை நம்பி கணவரையும் விவாகரத்து செய்தேன். அதன் பிறகு தேவைப்படும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தேன். அப்படி பல லட்சங்களை கொடுத்துள்ளேன். சொத்து பத்திரத்தையும் அடமானம் வைத்து கொடுத்துள்ளேன்.
மேலும் ‘இனி, நீ வேலைக்கு போகக் கூடாது” என்றார். என் மீது இவ்வளவு ஆசை வச்சியிருக்கிறாரே என நினைத்து அவருக்காக வேலையை ரிசைன்செய்தேன். அவரையை முழுசாக நம்பி இருந்த எனக்கு துரோகம் செய்துவிட்டு கடந்த ஆண்டு எனக்கு தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்து அவரிடம் சண்டை போட்டேன். அப்போது, ‘நான் அவளை 3 மாதத்தில் டைவா்ஸ் செய்து விடுவேன்’ என கூறி சமாதானம் செய்து அனுப்பினார். ஒரு முறை ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வைத்து கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன். அப்போது ரதீஷ்குமார் என் கைக்கு மருந்து வைத்து கட்டு போட்டு சமாதானம் செய்து அனுப்பினார். ஆனால், அவர் என்னை திருமணம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் என்னுடன் தொடர்பை துண்டித்த அவரை நான் ஒரு முறை தொடர்பு கொண்ட போது, ‘இனி என்னை தொந்தரவு செய்தால் உன் பெயரை எழுதி வைத்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்றார். அப்போது நீ ஏன் தற்கொலை செய்யணும்; நானே உன்னை கொல்லுறேன் என மனசுக்குள் முடிவு செய்தேன்.
இதற்காக கத்தியும் மரவேலைக்கு பயன்படுத்தக் கூடிய குத்தூசியையும் எடுத்து வைத்து கொண்டு அவரை கொலை செய்வதற்கான தருணத்துக்காக காத்து கொண்டிருந்தேன். இந்த நிலையில், 13-ம் தேதி என் பிறந்த நாளையொட்டி வாழ்த்து சொன்ன ரதீஷ்குமார் வழக்கம் போல் மதியம் மருத்துவமனையில் யாரும் இல்லாத நேரம் என்னை அங்கு அழைத்தார். இது தான் சரியான நேரம், இன்னைக்கு அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற முடிவோடு, மீன் கூட்டோடு சோறும் சமைத்து கொண்டு போனோன்.
அவரை கத்தியால் குத்தும் போது தடுத்து விடக்கூடாது என்பதற்காக, அவரை மயக்க நிலைக்கு கொண்டு வந்து தான் குத்தி கொலை செய்ய வேண்டுமென முடிவு செய்து; சாப்பட்டில் விஷம் கலந்து வைத்திருந்தேன். மருத்துவமனைக்கு சென்றதும் வழக்கம் போல் என்னிடம் அன்பாக பேசி சமாதானம் செய்தார். பின்னர் நானே சாப்பாடு பரிமாறி கொடுத்த கொஞ்ச நேரத்தில் மயக்கமான நிலைக்கு வந்ததால், உடனே மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் கோபம் தீரும் வரை கழுத்திலும் மார்பிலும் குத்தி கொலைச் செய்தேன்” என்றார்.
இதற்கிடையில் மதியம் சாப்பாட்டுக்கு ரதீஷ்குமார், வீட்டுக்கு வராததால் போன் செய்து பார்த்த அவருடைய மனைவி, கணவனை தேடி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு போலீசாரும், பொது மக்களும் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கணவர் கொலை செய்யப்பட்டு உள்ளதை அறிந்து கதறி அழுதார். மேலும் ரதீஷ்குமார் உடலில் 30 இடங்களில் கத்தி குத்துகள் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)