Skip to main content

கொட்டித் தீர்த்த பேய் மழை! தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளிக்கும் கன்னியாகுமரி! 

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Kanniyakumari heavy rain and flood

 

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கன மழை பெய்தது. இதில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் மாவட்டம் முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் நீர் வரத்து அதிகரித்ததையொட்டி அந்தப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

Kanniyakumari heavy rain and flood

 

பின்னர் அந்த அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள 20 அடி உயரத்திலான கல் மண்டபத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு, பழையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்துள்ளது. இதனால் 5 வீடுகள் இடிந்து விழுந்தது.

 

Kanniyakumari heavy rain and flood

 

குழித்துறை மற்றும் குறும்பனையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் நிஷான், ஜெபின் ஆகிய இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தனர். அதே போல் கிராம்பு பறிக்கும் தொழிலாளி வாழையத்து வயலைச் சேர்ந்த சித்திரைவேல் (39), காளிகேசம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு நெல், வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் அந்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

Kanniyakumari heavy rain and flood

 

வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், கல்லுபாலம் இசக்கி அம்மன் கோவில், காளிகேசம் இசக்கி அம்மன் கோவில் உட்பட 10க்கும் மேற்பட்ட கோவில்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் ஆளூரில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் மண் மற்றும் கற்கலால் மூடியது. இதில் அனந்தபுரி ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் ஆறுகாணி, பத்துகாணி, மருதம்பாறை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதிலும் மக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து செல்லமுடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம் குளம் போல் காட்சியளிக்கிறது. 

 

Kanniyakumari heavy rain and flood

 

செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள், நர்சரி பூந்தோட்டங்களில் வெள்ளம் புகுந்ததால் அந்த விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீடுகளைச் சூழ்ந்து வெள்ளக்காடாக இருந்ததால் வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்களும், சமூக தொண்டர்களும் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 600 பேரை மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதில் நித்திரவிளை அருகே வைக்கலூரில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் அது தனித் தீவாக மாறி அதில் 40 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர்களின் படகு கவிழ்ந்ததால் 13 தீயணைப்பு வீரர்கள் நீந்தி கரையைச் சேர்ந்தனர்.

 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (18-ம் தேதி) குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கான நிவாரணங்களும் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.