Advertisment

“மகளிர்கள் மலர்களல்ல; தீப்பந்தம்” - கனிமொழி எம்.பி. ஆவேசம்

Kanimozhi speech at trichy

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று (07/10/2023) நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்பேசிய கனிமொழி எம்.பி., "இந்த கூட்டம் என் கண்ணுக்கு மலர்களாகத்தெரியவில்லை; தீப்பந்தம் போல் தான் தெரிகிறது. நாம் சுழன்று எறிவோம். முதன் முதலில் திராவிடக்கழகம் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என முடிவெடுத்த மண் இந்த திருச்சி மண்.

Advertisment

திராவிட இயக்கம் என்பது பெண்கள் உழைப்பை மதிக்கக் கூடிய, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். மற்ற மாநிலங்களில் வாக்குரிமைக்குப் போராடினார்கள். தமிழ்நாட்டில் எந்த போராட்டமும் பண்ணாமல் நமக்கு வாக்குரிமை கொண்டு வந்தது திராவிட இயக்கம்.

Advertisment

பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை, உதவி திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.இதற்கு அடுத்தாற்போல் பெண்கள் உரிமைத்தொகையை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் கொண்டு வந்தவர் கலைஞர். அடுத்த தேர்தலில் 50 சதவீத பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

கொரோனாவிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. பணிக்கு, படிக்க செல்பவர்கள் தடைப்படக்கூடாது என இலவச மகளிர் பேருந்து கொண்டுவரப்பட்டது. தடைகளையும் ஒவ்வொன்றாக உடைக்கக் கூடியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெண்களின் சிந்தனையைமாற்றக் கூடிய திட்டமாகும். விடுதலைக்கான வித்து என்றால் மகளிர் உரிமைத் தொகை தான்.

மகளிர்க்கான மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், நாடாளுமன்றம் கூடிய உடன் மகளிர் மசோதா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்கள். இது அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆனால் இத்தனை ஆண்டு காலம் மகளிர் மசோதா கொண்டுவர வேண்டுமென போராட்டம் நடத்தினோம் கண்டுகொள்ளவில்லை.

இதைக் கொண்டு வர வேண்டும் என்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதன் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படும். மக்கள் கணக்கெடுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று யாருக்கும் தெரியாது.பல வருடங்கள் கழித்து கூட ஆரம்பிக்கலாம். இந்த கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகள் நடக்கலாம் என்று தெரியாது. அதன் பிறகு மறு வரையறை செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.

தமிழகம் பல்வேறு வகையில் முன்னேறி இருக்கிறது. சரியாக இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது. தொகுதி மறு வரையறை வந்தால் பாதிக்கப்படுவது நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள். இதற்கு நாம் போராட வேண்டும். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா என்பது வெறும் கண்துடைப்பு இது உண்மையான மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இல்லை.பெண்களை ஏமாற்றுவதற்காக பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜாதி, மதம் வாரியாக மக்களை பிரித்தாள வேண்டும் என நினைக்கிறார்கள். இதில், அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். வன்முறை, அதிகாரம், அரசியல் அதிகாரம் தலை தூக்குகிறதோ அது பெண்களுக்கு எதிராக மாறும். ஒன்றியத்தில் இந்த ஆட்சி வரக்கூடாது என போராடக் கூடியவர்கள் பெண்கள் தான். வரக்கூடிய தேர்தலில் பெண்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மற்ற மாநில பெண் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பெண்கள் பிரச்சினைகள், வலிகள், குறைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்தியா பெயரை சொன்னாலே பயந்து போய் இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அச்சுறுத்தக் கூடிய ஒரு கூட்டணி. நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு அவர்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் உரிமைகளை விட்டுவிடாதீர்கள். ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால், அந்தப் பெண்ணுக்கு அரணாக மற்ற பெண்களும் நில்லுங்கள்" என்று அழுத்தமாகப் பேசினார் கனிமொழி எம்.பி.

kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe