Skip to main content

“மகளிர்கள் மலர்களல்ல; தீப்பந்தம்” - கனிமொழி எம்.பி. ஆவேசம்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Kanimozhi speech at trichy

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று (07/10/2023) நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., "இந்த கூட்டம் என் கண்ணுக்கு மலர்களாகத் தெரியவில்லை;  தீப்பந்தம் போல் தான் தெரிகிறது. நாம் சுழன்று எறிவோம். முதன் முதலில் திராவிடக் கழகம் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என முடிவெடுத்த மண் இந்த திருச்சி மண்.

 

திராவிட இயக்கம் என்பது பெண்கள் உழைப்பை மதிக்கக் கூடிய, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். மற்ற மாநிலங்களில் வாக்குரிமைக்குப் போராடினார்கள். தமிழ்நாட்டில் எந்த போராட்டமும் பண்ணாமல் நமக்கு வாக்குரிமை கொண்டு வந்தது திராவிட இயக்கம்.

 

பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை, உதவி திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர். இதற்கு அடுத்தாற்போல் பெண்கள் உரிமைத் தொகையை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் கொண்டு வந்தவர் கலைஞர். அடுத்த தேர்தலில் 50 சதவீத பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

 

கொரோனாவிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. பணிக்கு, படிக்க செல்பவர்கள் தடைப்படக்கூடாது என இலவச மகளிர் பேருந்து கொண்டுவரப்பட்டது. தடைகளையும் ஒவ்வொன்றாக உடைக்கக் கூடியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெண்களின் சிந்தனையை மாற்றக் கூடிய திட்டமாகும். விடுதலைக்கான வித்து என்றால் மகளிர் உரிமைத் தொகை தான்.

 

மகளிர்க்கான மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், நாடாளுமன்றம் கூடிய உடன் மகளிர் மசோதா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்கள். இது அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆனால் இத்தனை ஆண்டு காலம் மகளிர் மசோதா கொண்டுவர வேண்டுமென போராட்டம் நடத்தினோம் கண்டுகொள்ளவில்லை.

 

இதைக் கொண்டு வர வேண்டும் என்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதன் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படும். மக்கள் கணக்கெடுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று யாருக்கும் தெரியாது. பல வருடங்கள் கழித்து கூட ஆரம்பிக்கலாம். இந்த கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகள் நடக்கலாம் என்று தெரியாது. அதன் பிறகு மறு வரையறை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். 

 

தமிழகம் பல்வேறு வகையில் முன்னேறி இருக்கிறது. சரியாக இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது. தொகுதி மறு வரையறை வந்தால் பாதிக்கப்படுவது நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள். இதற்கு நாம் போராட வேண்டும். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா என்பது வெறும் கண்துடைப்பு இது உண்மையான மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இல்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

ஜாதி, மதம் வாரியாக மக்களை பிரித்தாள வேண்டும் என நினைக்கிறார்கள். இதில், அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். வன்முறை, அதிகாரம், அரசியல் அதிகாரம் தலை தூக்குகிறதோ அது பெண்களுக்கு எதிராக மாறும். ஒன்றியத்தில் இந்த ஆட்சி வரக்கூடாது என போராடக் கூடியவர்கள் பெண்கள் தான். வரக்கூடிய தேர்தலில் பெண்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

 

வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மற்ற மாநில பெண் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பெண்கள் பிரச்சினைகள், வலிகள், குறைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

 

இந்தியா பெயரை சொன்னாலே பயந்து போய் இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அச்சுறுத்தக் கூடிய ஒரு கூட்டணி. நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு அவர்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் உரிமைகளை விட்டுவிடாதீர்கள். ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால், அந்தப் பெண்ணுக்கு அரணாக மற்ற பெண்களும் நில்லுங்கள்"  என்று அழுத்தமாகப் பேசினார் கனிமொழி எம்.பி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.