கண் கலங்கி நின்ற விவசாயிகள்... ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி...

Kanimozhi MP who expressed his condolences to the disturbed farmers ..

வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர் காலம்வரை தென் மாவட்டங்களில் ஓரளவு மட்டுமே பெய்தது. குறிப்பாக கடலோரப் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை துவக்கத்தின்போது குளத்தூர் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் சூரங்குடி, எட்டயபுரம் பகுதிகள் உட்பட சுமார் 50 ஆயிரம் ஏக்கர்களில் மானாவாரி பயிர்களான மக்காச் சோளம், உளுந்து, பாசிப் பயிறு, மிளகாய், கடலை என்று பயிரிடப்பட்டன. மழை தாமதமாகத் தொடங்கினாலும் அதற்கேற்ப பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாரான சமயத்தில், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்குகளின் சுழற்சியால் தென் இலங்கைப் பக்கம் மையம் கொண்ட காற்றழத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த வாரம் தென் மாவட்டங்களில் அடைமழை கொட்டியது. இதனால், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகள்வெள்ளக்காடாயின. குறிப்பாக பயிர்கள் முற்றி அறுவடைப் பக்குவத்திலிருந்த நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் அழுகி போனது, வேறு சில பணப் பயிர்கள் அறுவடை செய்யாமலே மீண்டும் முளைத்ததால் விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பகுதிகளில் இதே நிலைமைதான் என விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.

கடன் பெற்று விவசாயம் செய்தவர்கள், அறுவடைப் பருவத்தில் பயிர்கள் நாசமானது கண்டு மனமுடைந்தனர். குளத்தூர்மற்றும் சூரங்குடி பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்ட உளுந்து, மல்லி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் காய்த்து செடியிலேயே அழுகிப் போனதை மாவட்ட எம்.பி.யான கனிமொழி பார்வையிட்டார். கண் கலங்கி நின்ற விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் கனிமொழியிடம் மனு கொடுத்தனர். அவர்களிடம் ‘நிச்சயம் இதற்கான நிவாரணத்தைப் பெற்றுத்தர முயற்சி எடுப்பேன்’ என்று கனிமொழிகூறினார்.

Kanimozhi MP who expressed his condolences to the disturbed farmers ..

இதனிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் திரண்டுவந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘மழையால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்;பலர் நிலக் குத்தகைதார்களாக உள்ளனர்,நிவாரணம் நில உரிமையாளர்களுக்குச் சென்றுவிடக் கூடாது;பாதிக்கப்பட்ட குத்தகை விவசாயிகளுக்குத் தரவேண்டும்’ என்று கலெக்டர் செந்தில் ராஜிடம் மனுக்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அதேபோன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், சேதமான பயரினங்களுக்கான நிவாரணம் தரக்கோரி ஆட்சியரிடம் மனுக்களைக் கொடுத்தனர்.

kanimozhi
இதையும் படியுங்கள்
Subscribe