










நேற்று (18/05/2021) செவ்வாய்கிழமை, புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் இன்று (19/05/2021) 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி, கி.ரா அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு உடனிருந்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சமகால எழுத்தாளர் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசு மரியாதை முதன்முதலாகச் செலுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அவருடைய சிலை அமைக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கு எழுத்தாளர் என்ற முறையில் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
இதில், சபாநாயகர் மு.அப்பாவு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மா.செ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.