Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா ஈ.பி.எஸ்? - கனிமொழி எம்.பி. பதில்

 

Kanimozhi MP Comment on Aruna Jagadesan commission

 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி  20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை  டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பதிலளித்திருந்தார். இது பெரும் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியது. 

 

Kanimozhi MP Comment on Aruna Jagadesan commission

 

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு என்ன காரணம், யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த  ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டு கால விசாரணையில் 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

Kanimozhi MP Comment on Aruna Jagadesan commission

 

அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை  டிவியில் பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறியது அனைத்தும் பொய். தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலையை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

 

Kanimozhi MP Comment on Aruna Jagadesan commission

 

திருமலை தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணிபுரிகிறார். மேலும் நெல்லை மாவட்ட திசையன்விளை காவல் நிலையத்தில் கிரேடு 1 காவலராக பணிபுரியும் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Kanimozhi MP Comment on Aruna Jagadesan commission

 

இந்நிலையில் இன்று, தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதலைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். நிச்சயமாக இன்னும் விசாரிக்கப்பட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்வார்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், “துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அதிகாரிகளும், காவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். அன்றைய முதலமைச்சர் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என பொதுமக்கள் கேட்கின்றனர்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி, “நீங்கள் சொல்வது நியாயம். பலதரப்பினரிடமும் இந்தக் கேள்வி வருகிறது. முதலமைச்சர் விசாரித்து முடிவு எடுப்பார். இல்லையென்றால் நீங்களே காழ்ப்புணர்ச்சி என்று சொல்வீர்கள்” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !